கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலமையை விட மோடி ஆட்சியில் இந்தியா மிக மோசமான நிலையில் இருப்பதாக சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது.
சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் உரி தாக்குதல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்ற காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலமையை விட நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா மிக மோசமான நிலமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தீவிரவாதிகளை ஒழிக்க மோடி தவறினால் சர்வதேச சமூகத்திற்கு சென்று பிதற்றிக்கொள்வதில் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளது.
ஜம்மு கஷ்மீரின் மாநில அரசை கலைத்து விட்டு அங்கு இராணுவ சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கும் பாகிஸ்தான் ஆதரவாளர்களை எதிர்கொள்வதற்கும் அதுவே சிறந்த வழியாகும் என சிவசேனா தெரிவித்துள்ளது. உரி தாக்குதல் சம்பவத்தின் மூலம் பட்டவர்த்தனமாக இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்துள்ளது. ஆனால் இந்தியாவோ தாக்குதலுக்கான ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால் பாகிஸ்தானின் அட்டூழியத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நம் இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசோ எச்சரிக்கை விடுப்பதை தவிர வேறு எந்த காரியத்தையும் செய்யவில்லை. எதற்காக ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்க வேண்டும்? பாகிஸ்தான் மீது உங்களுக்கு (மோடிக்கு) நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லையென்றால் நீங்கள் பிரதமராக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த உலக நாடுகளும் இந்தியாவிற்கு உதவப்போவதில்லை. வெறும் நான்கு தீவிரவாதிகளை கொண்டு இந்தியா மீது பாகிஸ்தானால் போர் தொடுக்க முடியும் என்றால் பதிலுக்கு இராணுவ வீரர்களை கொண்டு ஏன் இந்தியாவால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க முடியவில்லை? என சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பா.ஜகவின் கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்து வந்தாலும் இரு கட்சிகளுக்குமிடையே கடும் வார்த்தைப்போர் நிகழ்ந்து வருகிறது. பா.ஜ.க அரசு இந்துக்களை ஏமாற்றிவிட்டதாக சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments