ஜம்மு கஷ்மீர் உரி இராணுவ தலைமையகத்தின் மீது தாக்குதல் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானைச்சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷே -இ-முகமது தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஜம்மு கஷ்மீர் மாநிலம் உரியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 17 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய இந்திய இராணுவ தலைமை அதிகாரி ரன்பீர் சிங் கூறியதாவது, பயங்கரவாதிகள் தாக்குதலின் போது உபயோகப்படுத்திய ஆயுதங்களை பரிசோதிக்கும் போது அவை அனைத்தும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டோம். இத்தகவலை பாகிஸ்தான் அரசிற்கும் தெரிவித்துவிட்டோம்.
வெளிநாட்டைச்சேர்ந்த தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதியாகவே கூறுகிறோம். எங்களது முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷே -இ- முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தான் இதற்கு காரணம். அவர்கள் பயன்படுத்திய ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் நான்கையும் பறிமுதல் செய்திருக்கிறோம். அவை அனைத்துமே பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை தான்" என்றார் ரன்பீர் சிங்.
இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய இராணுவம் தயாராகவே இருக்கிறது. பயங்கரவாத தாக்குதல்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்திய இராணுவம் எப்போதுமே தயாராக இருக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். பயங்கரவாதிகள் சிறு சிறு ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் இராணுவ வீரர்கள் தங்கியிருந்த டென்டுகள் தீப்பற்றிக்கொண்டன. கொல்லப்பட்ட 17 இராணுவ வீரர்களில் 13 முதல் 14 பேர் இந்த தீயில் அகப்பட்டு உயிரிழந்தனர். இவ்வாறு ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments