தங்களது ஆட்சியை உலகம் முழுவதும் பரப்ப ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்போது பள்ளி சிறுவர்களுக்கு தீவிரவாத பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை பரப்ப தற்போது பள்ளி சிறுவர்களை பயன்படுத்தி வருகிறார்கள். சிரியாவின் அல்-ரக்கா பகுதியை ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அங்குள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் ஆரம்பத்தில் மூடிவிட்டு பாடபுத்தகங்கள் அனைத்தையும் எரித்துள்ளனர். அங்கு பணி புரிந்த ஆசிரியர்கள் அனைவரும் மனம் திரும்புவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் பழைய பாட திட்டங்களை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
சில மாதங்கள் கழித்து அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. பல பாட திட்டங்களும் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக ஷரியா பாட திட்டங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும அராபிக் மொழியை கற்றுக்கொடுக்கும் வகுப்புகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் விதத்திலும் பலரும் அந்நகரை விட்டு இரகசியமாக வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு வெடி குண்டு தயாரிக்கவும் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிணயக் கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இதனையும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பொம்மையை கொடுத்து அதன் கழுத்தை அறுக்கும் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இப்படி படிப்படியாக பயிற்சிகளை கொடுத்து இறுதியில் அவர்களை தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு தயாராக்குகின்றனர்.
இறுதியில் அவர்களை தங்கள் அமைப்பில் இணைத்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாக அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

No comments:
Write comments