சமீபத்தில் உலக பணக்கார நாடுகளின் பட்டியிலில் இந்தியா 7வது இடத்தில் இருப்பதாக பரவலாக செய்திகள் வந்தது. என்றாலும் சமமற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
இந்திய நாட்டின் மொத்த செல்வத்தில் பாதி குறிப்பிட்ட சில பணக்காரர்களிடம் இருப்பதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. 1 மில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான செல்வங்கள் சில பண முதலைகளிடம் குவிந்து கிடக்கிறது.
உலக செல்வ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி ரஷியாவை அடுத்து இந்தியாவில் தான் செல்வங்கள் சரிசமமான பங்கீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த செல்வத்தின் 54% பெரும் பணக்காரர்களிடம் இருப்பதாக அது தெரிவித்துள்ளது. உலக பணக்கார நாடுகளில் முதல் 10 இடங்களில் ஒன்றாக விளங்கும் இந்தியா மொத்தம் 5600 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான செல்வங்கள் கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால் சராசரி மனிதனின் வருமான விகிதாச்சாரம் மிகக் குறைவாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு முன்பாக ரஷியாவில் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது. அந்நாட்டின் மொத்த செல்வத்தில் 62% அங்குள்ள செல்வந்தர்கள் வைத்திருக்கிறார்கள்.
உலகில் சமத்துவமின்மை குறித்த ஆராய்ச்சியில் இறங்கிய இந்நிறுவனம் செல்வத்தின் பங்கீடு குறித்த விகிதாச்சார கணக்குகளை ஆராய துவங்கிய போது இந்த விபரங்களை அது கண்டெடுத்துள்ளது.
இந்த நிலைக்கு மாற்றமாக தனது பொருளாதாரத்தை நல்ல நிலையில் பங்கிட்டு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அந்நாட்டில் உள்ள செல்வந்தர்கள் 22% செல்வத்தையே தங்களிடம் வைத்திருக்கின்றனர். ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் செல்வந்தர்கள் 28% செல்வத்தை வைத்திருக்கின்றனர். அமெரிக்காவை பொருத்தவரை அங்குள்ள செல்வந்தர்கள் அமெரிக்காவின் மொத்த செல்வத்தில் 32% தங்களிடம் வைத்திருக்கின்றனர். இங்கிலாந்து 35% செல்வத்தை அந்நாட்டு பணக்காரர்கள் வைத்திருக்கின்றார்கள். இவ்வாறு அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
ஒரு நாட்டின் சராசரி மனிதனின் வருமானம் உயர்ந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடைகிறது என்று கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். எல்லா துறைகளிலும் நாடு முன்னேற வேண்டும். பணக்காரர்களிடம் மட்டுமே பணம் குவிந்து கொண்டிருக்க இன்னமும் ஒரு வேலை உணவிற்காக ஒரு மனிதன் அலைகின்றான் என்றால் அந்த நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக கருதவே முடியாது. உடலில் எல்லா பாகங்களும் வளர்ந்தால் தான் அது வளர்ச்சி, இல்லையென்றால் அதனை வீக்கம் என்றே கருத முடியும்.
இதற்காக எந்த ஒரு தனிப்பட்ட கட்சியையோ, மனிதரையோ அல்லது பணக்காரர்களையோ குற்றஞ்சாட்டி விடமுடியாது. இதற்கான பழியை ஒட்டுமொத்த மக்களும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஜப்பான் என்கிற நாடு பெரும் அழிவிற்கு ஆட்படுத்தப்பட்ட போதும் அந்த மக்களின் உழைப்பால் தான் அந்த நாடு முன்னேறியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

No comments:
Write comments