மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தனது இறுதி மூச்சு வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில்தான் உறுப்பினராக இருந்தார் என அவரது குடும்பத்தினரே தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1948ஆம் ஆண்டு தேசப்பிதா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தார். இதற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தொடர்பு உண்டு என கூறப்பட்டும் அவ்வமைப்பு ஆரம்ப காலகட்டத்தில் தடை செய்யப்பட்டது. இருப்பினும் பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது. அன்றிலிருந்தே மகாத்மா காந்தி கொலைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் பேசும்போது காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான் என தெரிவித்தார். இதனை கடுமையாக கண்டித்த ஆர்.எஸ்.எஸ் ராகுல் காந்திக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தான் கூறிய பேச்சுக்கு மன்னிப்பு கோரிவிட்டதால் இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக ராகுல் காந்தியிடம் உச்ச நீதிமன்ற தெரிவித்திருந்தது. ஆனால் தான் கூறிய கருத்தை ஒருபோதும் வாபஸ் வாங்கமாட்டேன் என்றும் தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
தற்போது நாதுராம் கோட்சே தனது இறுதி மூச்சு வரை சங்க் அமைப்பில்தான் இருந்தார் என அவரது உறவினரே கூறியிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்கரின் பேரனான சத்யகி சாவர்கர் கூறும்போது " நாதுராம் கோட்சே காந்தியின் கொலைக்கு தான் மட்டுமே பொறுப்பு என்பதை தெளிவாக சொன்னாலும், அவர் தனது இறுதி மூச்சு வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராகவே இருந்தார். காந்தி கொலையை ஆர்.எஸ்.எஸ் வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல், நாதுராம் கோட்சேவை முற்றிலுமாக புறக்கணித்தது. ஆனால் அவரை அமைப்பிலிருந்து வெளியேற்றவோ, கோட்சே அவர்களே அமைப்பை விட்டு வெளியேறவோ இல்லை" என தெரிவித்தார்.
அதே சமயம் ராகுல் காந்தியின் பேச்சு அரசியல் முதிற்சியற்ற பேச்சாகும். தான் செய்த கொலையை நாதுராம் கோட்சே பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. காந்தியை கொலை செய்தது தன்னுடைய திட்டம் தான் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் அந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அவரே தெளிவுபடுத்தியிருக்கிறார். என சத்யகி தெரிவித்தார்.
இன்னமும் ஆர்.எஸ்.எஸ் தான் காந்தியை கொலை செய்தது என ராகுல் காந்தி கூறுவாரேயானால் அது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசுவதாகும் என சத்யகி மேலும் தெரிவித்தார். சத்யகி தற்போது சாஃப்ட்வே இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அவரது தாய் ஹிமானி சாவர்கராவார். நாதுராம் கோட்சேவின் தம்பியான கோபால் கோட்சேவின் மகள்தான் ஹிமானி.
காந்தி கொலை வழக்கில் கோபால் கோட்சேவிற்கு ஆயுள்தண்டனைவ் விதிக்கப்பட்டது. சில கருத்து மோதல்களால் நாதுராம் கோட்சே ஹிந்து ராஷ்டிரிய தள் என்ற புதிய அமைப்பை துவங்கினார், இருந்த போதும் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகவில்லை என உறுதியாக கூறுகிறார் சத்யகி. ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை துவக்கியபோது சாவர்கரோடு இணைந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் நாதுராம் கோட்சே. ஹெட்கேவருக்கு பிறகு கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்ட் தலைவராக உருவானபோது அமைப்பு இந்துத்துவா கொள்கைகளிலிருந்து தடம்புரண்டுவிட்டதாக நாதுராம் கோட்சே எண்ணினார். அன்று முதல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து சற்று விலகியே இருந்திருக்கிறார் கோட்சே.
1946ஆம் ஆண்டு இந்தியாவின் தேசியக்கொடி மூவர்ணக்கொடியாக இருக்கக்கூடாது என்றும் காவி நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டுமென விரும்பியவர் நாதுராம் கோட்சே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments