இவ்வருடம் ஹஜ் யாத்திரையின் போது கூட்ட நெரிசல்களை சமாளிக்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவிற்கு ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்வது வழக்கம். உலகிலேயே அதிக இஸ்லாமியர்கள் கூடும் சம்பிரதாயமாக ஹஜ் வணக்கம் கருதப்படுகிறது. இந்த வருடம் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகள் வருவார்கள் என கருதப்படுகிறது. ஏற்கனவே பல நாடுகளிலிருந்து யாத்திரிகள் வரத்துவங்கிவிட்டதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
இம்முறை கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், நெரிசலை சமாளிப்பதற்காகவும் பல்வேறு புதிய நடவடிக்கைகளை சவுதி அரேபியா அரசு எடுத்துள்ளதாக அதன் அமைச்சர் மன்சூர் துர்க்கி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மெக்காவில் உள்ள ஜமாரத் என்னும் பகுதியில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நெரிசலுக்கு காரணம் விதிமுறைகளை மீறி பல யாத்திரிகள் சென்றதே என சவுதி அரேபியா அரசு தெரிவித்தது. மேலும் அவ்வாறு சென்றவர்களில் ஈரான் நாட்டைச்சேர்ந்தவர்கள் என ஈரானை குற்றஞ்சாட்டியது. இச்சம்பவத்தை தொடர்ந்து சவுதி மற்றும் ஈரான் நாட்டிற்கிடையே பகை மூண்டது. ஈரான் தனது தூதரையும் திரும்ப பெற்றுக்கொண்டது.
இம்முறை அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை சவுதி அரசு மேற்கொண்டு வருகிறது. யாத்திரிகள் ஒவ்வொருவருக்கு கையில் அணிந்துகொள்ளும் எலக்டிரானிக் கைப்பட்டைகளை விநியோகித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பகுதியையும் அவர்கள் கடக்கும்போது மக்களின் எண்ணிக்கையை கணித்து அதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்திருக்கிறது. அதே போன்று மெக்காவில் இருக்கும் பெரிய மசூதியில் ஆயிரக்கணக்கான கேமராக்களும் பொறுத்தப்பட்டிருக்கிறது.
தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தலும் இருப்பதால் பாதுகாப்பு பணிக்காக பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தகுந்த அனுமதி அட்டை இல்லாமல் எந்த ஒரு நபரும் மெக்கா நகருக்குள் நுழைய முடியாதவாரு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ரம்ஜான் மாதம் இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நகரமாக கருதப்படும் மதீனாவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments