மதவாதம் இந்தியாவில் இருக்கிறதா? என யாரும் கேட்டால் ஆம்! என்று நாம் தயங்காமல் கூறலாம். ஆனால் அத்தோடு நிறுத்திவிடாமல் அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது மக்களிடத்தில் அல்ல என்பதனையும் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் பல்வேறு மதங்களை பின்பற்றக்கூடிய மக்கள் இருந்துவந்தாலும் மதவாதம் என்பது மக்களிடத்தில் இல்லை என்றும் அது ஆட்சி அமைப்பதற்காக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஓர் ஆயுதமே என்பது பல சமயங்களிலும் நிரூபணமாகியுள்ளது. அப்படி மதவாதம் அல்லாத மனிதர்கள் என்பதற்கு இதோ மற்றொரு சான்று,
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவைச்சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் ரேஷ்மா பேகம். இவர் தனது 5 வயது குழந்தையை குரான் ஓதவைக்க பூஜா என்ற இந்து பெண்ணிடம் அனுப்பி வைக்கிறார். 12வது வகுப்பு படித்து வரும் பூஜா குஷ்வாலா தனது படிப்பு நேரம் போக மீதமுள்ள நேரத்தில் 35 இஸ்லாமிய குழந்தைகளுக்கு குரான் படித்துக்கொடுக்கிறார் என்ற ஆச்சரியமான செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆக்ராவிலுள்ள கோயில் முற்றத்தில் வைத்து குரான் வகுப்பை நடத்தி வரும் பூஜா இதற்கென எந்த தொகையும் வசூலிப்பது கிடையாது. முற்றிலும் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாகவே படித்துக்கொடுக்கிறார். எப்படி நீங்கள் அரபி மொழியை கற்றுக்கொண்டீர்கள்? என கேட்டதற்கு தனது தோழி சங்கீதா பேகம் என்பவரிடமிருந்து கற்றுக்கொண்டதாக கூறுகிறார் பூஜா. சங்கீதா எனக்கு இஸ்லாம் மதம் தொடர்பாக பல்வேறு விசயங்களை கற்றுக்கொடுத்தார். நாம் கற்றுக்கொண்டதை பிறருக்கு கற்றுக்கொடுக்கவில்லை எனில் நாம் கற்றுக்கொண்டதற்கு எந்த அர்த்தமும் இல்லை என கூறுகிறார் பூஜா.
அப்பகுதியில் உள்ள ஓர் இஸ்லாமிய அறிஞர் ஹாஜி ஜமீலுத்தீன் கூறும்போது இது போன்ற சமூக நல்லிணக்கத்தை காணுவது என்பது அறிதிலும் அறிதாக இருக்கிறது. சமூக நல்லிணக்கத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டாக பூஜா திகழ்கிறார். யார் வேண்டுமானாலும் குரானை படிக்கலாம் என்பதற்கு பூஜாவின் நிகழ்வே சான்று என தெரிவித்தார்.
No comments:
Write comments