பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு அரசிற்கு எதிராக அங்குள்ள பிரிவினைவாதிகள் போராட்டங்களை நடத்தி வருவது நீண்ட காலமாக நடந்து வருகின்றது. இந்நிலையில், பலூசிஸ்தானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு இந்தியா தான் காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா மறைமுகமாக உதவி செய்து வருகின்றது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பலூசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் தொடர்பு வெளிப்படையாக அறியப்படுகின்றது. சமீபத்தில் இந்திய சுதந்திர தினவிழாவின் போது பிரதமர் மோடி பலூசிஸ்தான் பிரச்சனைக் குறித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சு பாகிஸ்தான் அரசிற்கு எதிராக போராடும் பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக இருந்தது. இதனால் அங்கு போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றன.
பாகிஸ்தானில் 2008-13ம் காலகட்டத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அரசில் உள்துறை அமைச்சராக நான் பணியாற்றிய போது இந்தியாவின் அப்போதைய உள்துறை அமைச்சருடன் பலூசிஸ்தான் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சி முடிந்த பிறகு இதுபற்றிய பேச்சுவார்த்தையை எங்களால் தொடர முடியவில்லை. தற்போது உள்ள நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பலூசிஸ்தான் பிரச்சனையின் பின்னணியில் செயல்படும் அமைப்புகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பான இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு பிரகடன ஒப்பந்தத்தையும் ரெஹ்மான் மாலிக் விமர்சித்துள்ளார்.
No comments:
Write comments