வங்கிகளில் கடன் வாங்கித் தருகிறேன் என்று கூறி, பொதுமக்களை ஏமாற்றுவது ஒரு மோசடித் தொழிலாகவே உருவாகி வருகிறது எனலாம். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, மந்தாரம்புதூர் பகுதியைச் சேர்ந்த ஷாகிரா, வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி முப்பதுக்கும் மேற்பட்டோரிடம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் வசூலித்துள்ளார். பின்னர், பயனாளிகளை வங்கிக்கு அழைத்துச் சென்று, ஆவணங்களில் கையெழுத்து வாங்கி அனுப்பி விட்டு, பணத்தை அவர் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மற்றவர்களின் பெயரைப் பயன்படுத்தி வங்கியில், 10 லட்சம் ரூபாய் பணம் பெற்ற ஷாகிரா, தவணைத் தொகையை கட்டவில்லை. ஆனால் வங்கி, பணம் வாங்காத 32 பேருக்கு பணத்தை உடனடியாகச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ந்த அவர்கள், நாகர்கோயில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். அதையடுத்து குற்றப் பிரிவு போலீஸார் மோசடி செய்த ஷாகிராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இம்மாதிரியான மோசடிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் அதிகளவில் நடக்கிறது. ஆகையால் வங்கிகள் கடன் தரும்போது, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் இல்லாமல் கடன் தர முன்வரக்கூடாது என்று பாதிக்கப்பட்டோர் கூறினர்.

No comments:
Write comments