காவிரி விவகாரம் தொடர்பாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழிசை செளந்தரராஜன், மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் ஹெச். ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவைக்கு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இல. கணேசன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது, எங்களது கட்சியின் தேசியத் தலைவருடனான தமிழக தலைவர்களின் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. காவிரி விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே தயாரித்த அறிக்கையை அவரிடம் கொடுத்தோம். அதைப் படித்துப் பார்த்த அவர், தமிழகம் எந்த விதத்திலும் வஞ்சிக்கப்படாது என்று கூறினார். காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாவிட்டாலும், அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக உயர்நிலை தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கர்நாடகத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ளது. இக்குழு அறிக்கையை தாக்கல் செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தைப் பொருத்த வரையிலும் நியாயம் கிடைக்கும் வகையில் பாஜக நடந்து கொள்ளும். தமிழகத்துக்கு நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும்; நியாயம் கிடைக்கும்.
தமிழகத்தில் தொடர்ந்து இந்து இயக்கத் தலைவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை மத்திய உள்துறை செயலர் கவனத்துக்கு கொண்டு சென்று, இதுபோன்ற தாக்குதல்கள் இனி நடைபெறமால் தடுக்க வேண்டும் என்பதையும் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுனோம் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

No comments:
Write comments