இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே "தலாக்' விவகாரத்து முறைக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருக்கிறது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.மூன்று முறை "தலாக்' என்று கூறி விவாகரத்து அளிக்கும் நடைமுறை இஸ்லாமிய சமூகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது பெண்ணுரிமைக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி பல்வேறு முஸ்லிம் பெண்கள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. மதரீதியான விவகாரம் என்பதால், இதுகுறித்து உரிய பதில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில், கடந்த வாரம் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதச்சார்பற்ற தேசமான இந்தியாவில் பெண்களின் கண்ணியத்தையும், சமஉரிமையையும் எந்த ஒரு காரணத்தை முன்னிறுத்தியும் பறிக்க முடியாது என்று கூறிய மத்திய அரசு, "தலாக்' விவாகரத்து முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இது ஒருபுறமிருக்க, அனைத்து சமூகத்தினருக்கும் சமமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மக்களின் கருத்தறிய அரசு முற்பட்டது. அதற்கான கருத்துக் கேட்பு வினாத்தாள்களும் தயாரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், டேராடூனில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தலாக்' முறை குறித்தும்,
பொது சிவில் சட்ட விவகாரம் குறித்தும் கூறியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் கண்ணோட்டத்திலேயே "தலாக்' விவாகரத்து முறையை மத்திய அரசு அணுகியுள்ளது. பெண்களுக்கான சம உரிமை, பாலினப் பாகுபாடற்ற நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அதற்கு எதிரான நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். மதத்தின் பெயரால், பெண்ணுரிமை மறுக்கப்படுகிறதா? இல்லையா? என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டியது இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் மிகவும் அவசியம்.
"தலாக்' விவாகரத்து முறைக்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் நிலைப்பாட்டையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்புபடுத்தி சில அமைப்புகள் அரசியல் செய்ய முயலுகின்றன. அந்த இரு விவகாரங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டுமே வேறு வேறு விஷயங்கள் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
No comments:
Write comments