மத்திய அரசு அறிவித்துள்ள கறுப்புப் பண ஒழிப்பு அறிவிப்பில், ரூ. 8 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி மாநிலத்தின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘மத்திய அரசு ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு அரசு திரும்பப் பெறாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசு அறிவிப்பால் சாதாரண பொதுமக்கள்தான் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சுரங்க ஊழலில் கைதான முன்னாள் அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி, எப்படி தனது மகள் திருமணத்துக்கு ரூ.5௦௦ கோடி செலவழித்தார்? இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்ய வேண்டும். நாட்டில் சில்லறை செலவுகளுக்கே பணமின்றி பொதுமக்கள் தவிக்கும்வேளையில், இவருக்கு மட்டும் எப்படி ரூ.5௦௦ கோடி கிடைத்தது? மோடி விளக்கம் கொடுப்பாரா? இல்லை, அவரை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடுவாரா?
கறுப்புப் பண ஒழிப்பு அறிவிப்பில் ரூ.ரூ. 8 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. அனைத்துக் கட்சியினரும் கறுப்புப் பணத்தை வெளியிட வேண்டும். கறுப்புப் பண முதலைகளுக்கு அவர்களது வீட்டுக்கே சென்று கறுப்புப் பணத்தை வழங்கியுள்ளனர்.
அரசு அனுமதித்துள்ள ரூ. 2.5௦ லட்சத்துக்குள் எப்படி திருமணம் நடத்த முடியும். சுவிஸ் வங்கியில் கள்ளப் பணத்தை பதுக்கியவர்களை மோடி ஏன் கைது செய்யவில்லை? வங்கி வாசல்முன்பு 55 பேர் இறந்தது பாஜக-வினருக்கு சிறிய பிரச்னையாகத் தெரிகிறது.’ இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Write comments