சென்னையில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விரலில் மை வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க மத்திய அரசு புழக்கத்தில் உள்ள ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது.
இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு முன்பு வரிசையில் காத்திருந்து மாற்றி வருகின்றனர்.
இதையடுத்து வங்கியில் ரூ.4500 மாற்றவும், ஏடிஎம்களில் ரூ.2500 எடுக்கவும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை வங்கியில் இருந்து பணம் எடுக்கலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்த நோக்கத்திற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதோ அவற்றை முறையாக நெறிப்படுத்தும் விதமாக வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களின் கையில் அழியாத ‘மை’ வைக்கப்படும் என நேற்று புதிய உத்தரவு ஒன்றை நிதித்துறை அறிவித்தது.
இதையடுத்து வாக்கு அளிப்பதற்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை தடவுவது போல பணம் மாற்ற வரும் பொதுமக்களின் வலது கை ஆள்காட்டி விரலில் அழியாத ‘மை’ தடவ வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தை இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் வங்கி அதிகாரிகள் இடையே கடும் குழப்பமும் ஏற்பட்டது. அழியாத ‘மை’யை வங்கிகளே வாங்கி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்த போதிலும் இன்று காலை 10 மணி வரை எந்த வங்கியிலும் ‘மை’ வாங்கப்படவில்லை.
ஒவ்வொரு வங்கியும் அதன் தலைமை அலுவலகங்களில் இருந்து ‘மை’யை பெறவும் முயற்சித்தது. இதனால் காலை 9 மணி முதல் எல்லா வங்கிகளிலும் இன்று எவ்வாறு பணம் மாற்றி கொடுப்பது என்ற குழப்பம் நிலவியது.
இந்நிலையில், சென்னையில் தற்போது பஞ்சாப் நேஷல் வங்கியில் விரலில் ‘மை’ வைத்து பணம் மாற்றிக் கொள்வதற்கான பணி தொடங்கியுள்ளது.

No comments:
Write comments