பஞ்சாப் அரசியலில் அதிரடி திருப்பமாக பிரபல கிரிக்கெட் வீரர் சித்துவின் மனைவி, பிரியங்கா முயற்சியால் வருகிற 28ஆம் தேதி காங்கிரஸில் இணைகிறார். வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வெகு விரைவில் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பில் பாஜக, அகாலிதளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பிரகாஷ்சிங் பாதல் முதல்வராக இருக்கிறார். அவரது மகன் சுக்பீர்சிங் பாதல் துணை முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் அங்கு ஆளும்கட்சிக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் திட்டமிட்டு வருகின்றனர். காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் முயற்சியில் பிரியங்காவும் செயல்பட்டு வருகிறார். பாஜக-வைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சமீபத்தில் பாஜக-வில் இருந்து விலகியதுடன் அவரது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது மனைவி நவ்ஜோத் கவூரும் பாஜக-வை விட்டு விலகினார். அதையடுத்து, சித்து தனிக்கட்சி தொடங்குவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அரசியல் சார்பற்ற பொதுநல அமைப்பை மட்டுமே தொடங்கினார்.
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அகாலிதளம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற நான்கு கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இந்நிலையில் பாஜக-வை விட்டு விலகிய சித்துவை காங்கிரஸுக்கு இழுத்தால் வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என்று சோனியாவும், மாநில காங்கிரஸாரும் திட்டமிட்டனர். அதையடுத்து, சித்துவின் மனைவியை பிரியங்கா மூலமாக இழுக்க காங்கிரஸ் கட்சியினர் முயற்சி செய்தனர். அதற்கு, கைமேல் பலனாக சித்துவின் மனைவி நவ்ஜோத் கவூர் வருகிற 28ஆம் தேதி காங்கிரஸில் இணைகிறார். அதேபோல், மற்றொரு விளையாட்டு வீரரான பர்கத் சிங்கும் காங்கிரஸில் இணைகிறார். அதையடுத்து, சித்துவும் விரைவிலேயே காங்கிரஸில் இணைவார் என்று தெரிய வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இன்னும் முழு ஈடுபாடு காட்டாத பிரியங்கா, பஞ்சாப் தேர்தலில் இருந்து முழுமையாக களமிறங்குவார் என்று தெரிய வருகிறது. பிரியங்காவின் வருகையால் அதிகளவிலான இளைஞர்கள் காங்கிரஸில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments