காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப.சிதம்பரம் நேற்று மாலை 6 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். அப்போது ரஜினியின் உடல் நலம் மற்றும் திரைக்கு வரவிருக்கும் அவரது திரைப்படங்கள் குறித்து முதலில் இருவரும் பொதுவாக பேசியிருக்கிறார்கள். பிறகு இருவரின் பேச்சு மெதுவாக தற்போதைய தமிழக அரசியல் சூழலைப் பற்றி திரும்பியுள்ளது.
அப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, அதைத் தொடர்ந்து அதிமுக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளார்கள். மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை முன்னிறுத்துவது அக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்னும் விதமாக இருவருக்குமான உரையாடல் நீண்டிருக்கிறது. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறைந்த நிலையில் அதிகம் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறித்தும், கருணாநிதிக்கு பிறகு திமுக பொருளாளர் முக ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் இருவரும் விவாதித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ரஜினி ஏன் அரசியலுக்கு வரக் கூடாது, அப்படி வந்து காங்கிரஸோடு இணைந்து செயல்படும் வேளையில் அது தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கும் என்றும் ரஜினியிடம், ப. சிதம்பரம் எடுத்துத்துரைத்துள்ளார். ப. சிதம்பரத்தின் கருத்தை மிகவும் கவனமாக செவி கொடுத்துக் கேட்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் எந்த முடிவும் எட்டாத நிலையில் இந்த சந்திப்பு நிறைவடைந்திருக்கிறது. ஆனால் இந்த சந்திப்பு மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியை சந்தித்த ப. சிதம்பரம் அடுத்ததாக தன் ‘ எழுத்து’ இயக்கத்தின் அறங்காவலர்களில் ஒருவரான கவியரசு வைரமுத்துவை சந்திக்கச் சென்றுள்ளார். அங்கும் அரசியல் பேச்சு சூடுபிடித்திருக்கிறது. அப்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் மற்றும் அக்கட்சியின் எதிர்காலம் குறித்தும் தீவிரமாக இருவரும் ஆலோசித்திருக்கிறார்கள். மேலும் தமிழக அரசியலின் எதிர்காலம் குறித்தும் இவருவரும் வெகுநேரம் பேசியிருக்கிறார்கள். தமிழகத்தின் மாற்று அரசியலுக்கான தொடக்கமாக இந்த பேச்சு வார்த்தை அமையலாம் என்று கூறப்படுகிறது.

No comments:
Write comments