-எம்.ராஜசேகர்
நன்றி: scroll.in
தமிழகத்தில் பல மாற்றங்கள் அரங்கேறுகின்றன. இதே நாளில், தமிழகத்தின் ஏகபோக மணல் குவாரி அதிபரான சேகர் ரெட்டியும் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார்.
பத்து நாட்களுக்குமுன், வருவாய் வரித் துறையினரின் சோதனையில் சேகர் ரெட்டியிடமிருந்து 177 கிலோ தங்கமும் 130 கோடி ரூபாய் பணமும் (அதில், ரூ.34 கோடி புதிய பணத்தாள்களில் இருந்தது) பிடிபட்டபோதே, ரெட்டி தலைப்புச் செய்தியாகிவிட்டார்.
இப்போதைக்கு, ரெட்டிக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்திக் குறிப்பு, ‘ரெட்டியின் நிறுவனமான ஜே.எஸ்.ஆர். இன்ஃபிரா டெவலப்பர்ஸ், உலக வங்கியால் கடனுதவி அளிக்கப்படும் பல திட்டங்களை ஒப்பந்தமுறையில் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் பொதுப்பணித் துறையும் மாநில நெடுஞ்சாலைகள் துறையும் தமிழக சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை மற்றும் பிற அரசு ஏஜென்சிகளும் அடக்கம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றைத் தவிர ரெட்டி, தமிழ்நாட்டில் ஆற்று மணல் அகழ்வு செய்யும் ஒரே ஒப்பந்ததாரர்.
மணல் குவாரி, லாபம் கொழிக்கும் வணிகம்
இவ்வருடத்தின் தொடக்கத்தில், இந்த நிருபர் scroll.in தளத்துக்கு செய்த களப்பணியின்போது, தமிழகத்தில் மணல் கையாளும் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்திருப்பதைக் கண்டறிந்தார். இந்த காண்ட்ராக்டர்கள், திராவிடக் கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பொருத்து, இந்த ஒப்பந்ததாரர்களுடைய அதிர்ஷ்டம் வளர்வதும் தேய்வதும் தொடர்கிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓ.ஆறுமுகசாமி எனும் தொழிலதிபருக்குத்தான் அனைத்து ஆற்று மணல் கையாளும் நீண்டகால ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன. இருப்பினும், 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிலிருந்து விலக்கப்பட்டார்.
இதுகுறித்து, தமிழகத்தில் ஊழலும் தேர்தல் அரசியலும் என்பதுபற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் ஒருவர், ஆறுமுகசாமி அதிமுக-வின் மாவட்டச் செயலாளர் ஒருவரை தன் தொழிலில் பங்குதாரராக இணைத்துக்கொண்டதாகக் கூறுகிறார். ‘கட்சியின் தலைமைக்கு இந்தச் செய்தி தெரிந்தபோது, மாவட்டச் செயலாளர் அதிரடியாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதோடு மட்டுமல்லாது, ஆறுமுகசாமியின் ஒப்பந்தமும் முடிந்துபோனது’ என்றும், அந்த ஆராய்ச்சியாளர் தகவல் சொல்கிறார். ஆளும் அதிமுக-வின் மூத்த அமைச்சர்கள் பலருடன் நெருக்கமாக இருந்த சேகர் ரெட்டி வசம், தமிழகம் முழுமைக்குமான மணல் கையாளும் ஏகபோக ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
மணல் அகழ்வு என்பது தமிழகத்தில் பணம் கொழிக்கும் வணிகம். இவ்வருடத்தின் தொடக்கத்தில், இந்நிருபர் scroll.in தளத்தில் எழுதியிருந்ததுபோல, மணல் அகழ்வின் வருடாந்திர வருவாய் ரூபாய் இருபதாயிரம் கோடி எனச் சொல்கிறது ஒரு மதிப்பீடு. தமிழக அரசியல்வாதிகளோ, அதன் மதிப்பு ரூ.45,000 கோடி ரூபாயாக இருக்கலாம் என யூகிக்கின்றனர். இந்தத் தொகையில் ஒரு சிறு பகுதிதான் அரசு கருவூலத்தைச் சென்றடைகிறது. தமிழ்நாட்டின் 2014-15 வருடத்திய பட்ஜெட்டில் மணல் குவாரிகளில் இருந்து ரூபாய் 216.8 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய வருடம், இதன் அளவு ரூபாய் 233.4 கோடியாக இருந்தது.
மணல் அகழ்வில் இருந்து வரும் பணத்தில் ஒரு பகுதி கட்சித் தொண்டர்களுக்கும் தேர்தல் செலவுகளுக்கும் செல்கிறது. ஆனால் இந்தப் பணம் மணல் அகழ்வில் வரும் வருடாந்திர வருவாயில் மிகச்சிறிய ஒரு பகுதிதான் என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர். மீதிப்பணம் எங்கே செல்கிறது என்பது புரியாத புதிர் எனவும் அவர் கூறுகிறார். தமிழக மணல் கொள்ளையின் மிக முக்கியமான அம்சம், தண்டனைகளில் சிக்காமல் அது இயங்கும் முறைதான். மாநில நிர்வாகிகளும் உள்ளூர் காவல் துறையினரும் மணல் கொள்ளை செய்பவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என கிராமவாசிகளும் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
மணல் கொள்ளை, பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியபோதும் பிற, ஜனநாயகத் தராசுகளான நீதிமன்றங்கள், ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் போன்றவற்றால் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந் நிருபர், தமிழ்நாட்டில் மணல் கொள்ளை குறித்து செய்தி சேகரித்தபோது, இதைத்தான் முதலில் கவனித்தார். அந்த நேரத்தில், மாநில அரசுக்கு இந்த நிருபரால் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
இந்தக் கொள்ளையின் பயனாளிகள் யார்? ஒப்பந்தங்கள் எவ்வாறு கொடுக்கப்படுகின்றன? மணல் மூலம் கிடைக்கும் பெரும் பணம் யாரிடம் செல்கிறது? மணல் கொள்ளையர்கள் பிடிபடமால் தப்பிக் கொண்டே இருப்பது எப்படி? என, எந்தக் கேள்விக்கும் புதிர்தான் விடையாக இருக்கிறது.
இந்நிலையில், தலைமைச் செயலர் ராவ் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டிருப்பது ஆச்சரியமானது. இவருக்கும் ரெட்டிக்கும் தொடர்பிருப்பதாக ஊடகக் குறிப்புகள் சொல்கின்றன. அதே செய்திக் குறிப்பில், ரெட்டிக்கு அதிமுக தலைவர்களோடு தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது கொண்டாட்டத்துக்கும் துக்கத்துக்குமான நேரமாகும். அப்படி கொண்டாடக் காரணம், அதிக வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்க வேண்டிய இயற்கை சுரண்டல் ஒன்றின் மர்மத் திரைகள் விலக்கப்படுகின்றன. ஆனால் அவை தவறான காரணங்களுக்காக விலக்கப்படுவதுதான் துக்கத்துக்குக் காரணம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் சோதனைகள் நடத்தப்பட்டிருப்பது, மத்திய அரசும் அதன் ஆளும் கட்சியும் தமிழ்நாட்டில் அரங்கேற்றவிருக்கும் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியோ? என்ற சந்தேகத்தை நமக்குள் விதைக்கிறது.
*
கட்டுரையாளர் குறிப்பு: எம்.ராஜசேகர், தமிழகத்தில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த கண்ணிகளையும் படம்பிடித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சிறந்த இணையச் செய்தி பதிவுகளுக்காக இக் கட்டுரைகளுக்கு ‘பாலகைலாசம் நினைவு விருது’ வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: ஸ்னேகா
கட்டுரை மூலம்: http://scroll.in/article/824828/the-lid-on-illegal-sand-mining-in-tn-might-finally-be-lifted-but-perhaps-for-the-wrong-reasons

No comments:
Write comments