மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக புதிய மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியிருப்பதை, தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியிருக்கும் புதிய மசோதாவில், மாற்றுத் திறனாளிகளின் வகை 7-ல் இருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளதும், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீடு மூன்று சதவிகிதத்தில் இருந்து நான்கு சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதும் உயர்கல்வியில் மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் அவர்களின் நலனுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் திமுக அரசு இருந்தபோதுதான் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனியாக ஒரு துறை முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் முதலமைச்சர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. ’ஊனமுற்றோர்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் முடிவிற்கு இணங்க ’மாற்றுத் திறனாளிகள்’ என்று அழைத்ததும் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசுதான் என்பதை இங்கே பதிவு செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ஆகவே, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக திமுக அரசு பாடுபட்டதுபோல் தற்போது இருக்கும் அதிமுக அரசும் பாடுபட வேண்டும் என விரும்புகிறேன். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவைத் தொடர்ந்து தமிழக அரசும் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்கல்வியில் உள்ள மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகதமாக உயர்த்தியும், மாநிலத்தில் உள்ள அரசு வேலை வாய்ப்புகளில் இருக்கும் மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டை நான்கு சதவிகிதமாக உயர்த்தவும் முன் வர வேண்டும் எனவும், காலியாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
- ரியாஸ்
கீ வேர்ட்ஸ்: ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகள் மத்திய அரசு மசோதா

No comments:
Write comments