திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்மையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கருணாநிதியின் உடல்நலன் குறித்து கேட்டறிய, கட்சிப் பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள் என பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி இரவு கருணாநிதியைக் காண காவேரி மருத்துவமனைக்கு வைகோ சென்றார்.
ஆனால் அங்கிருந்த ஒருசில திமுக-வினர் வைகோவின் காரை மறித்து, கருணாநிதியை சந்திக்கவிடாமல், வைகோவுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் ஏற்பட்ட சலசலப்புக்குப் பிறகு, கருணாநிதியை பார்க்காமலேயே திரும்பிச் சென்றார். மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் தெரிந்தவுடன் திமுக பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தும், தொண்டர்களைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டார். திமுக தலைவர்களும் தங்களது வருத்தங்களைத் தெரிவித்தனர்.
ஆனால் திமுக-வினர் திட்டமிட்டு தன்னைத் தாக்கியதாகவும், மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படிதான் இது நடந்ததாகவும் வைகோ குற்றம்சாட்டினார். மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ‘இந்தச் சம்பவம் எதிர்பாராதது. இதை ஸ்டாலின் கண்டித்ததை வரவேற்கிறேன்’ என்று கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘இந்தச் சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்கலாம்’ என்று தெரிவித்தார்.
ஆனால் மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கப்பட்டது குறித்து எந்தவிதக் கருத்தும் கூறவில்லை.
இதையடுத்து, மதிமுக-வினர் முத்தரசனை ஃபேஸ்புக்கில் கடுமையாக விமர்சனம் செய்தனர். விதவிதமாக எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏகப்பட்ட விமர்சனங்களைப் பொழிந்தனர். கடந்த சில தினங்களாக மதிமுக-வினர் முத்தரசனுக்கு எதிராக கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள முத்தரசன், ‘கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் மதிமுக ஆதரவாளர்கள் என்னை ‘வாழ்த்து’கிறார்கள். அதற்கு நன்றி. உங்கள் வேலையைத் தொடருங்கள்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அந்தச் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. அதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக-வின் செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அதை கண்டித்திருக்கிறார்கள். அத்துடன் முடிந்துபோன அந்தச் சம்பவத்துக்கு கண்டன அறிக்கை வெளியிடவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மதிமுக-வினர் வரம்புமீறி விமர்சிக்கிறார்கள்.’ என்று குற்றம்சாட்டினார் முத்தரசன்.

No comments:
Write comments