சென்னை தலைமைச் செயலகத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையானது நேற்று மாலையோடு முடிவுக்கு வந்தது. தொழிலதிபர் சேகர் ரெட்டி சிக்கிய பிறகு அவரிடம் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தொடர்பு தெரியவந்தது. இவ்விவகாரத்தில் கிடைத்த முக்கிய தகவல்கள் அடிப்படையில் நேற்று அதிகாலையில் இருந்து, சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடு, திருவான்மியூரில் உள்ள அவரது மகனின் வீடு உட்பட பல இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையை தொடங்கினர்.
இதற்கிடையே திடீரென்று தலைமைச் செயலகத்துக்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் அலுவலகத்தில் சோதனையை தொடங்கினர். அவர் அலுவலகத்தில் கைப்பற்றிய லேப்டாப் மற்றும் கம்யூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் பல ரகசிய தகவல்கள் கிட்டியிருப்பதாகத் தெரிகிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையானது மாலையில் முடிவுக்கு வந்தது. சோதனையடுத்து தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் உதவியாளர்கள் சேகர் மற்றும் குமாரை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனை ஒருவழியாக முடிந்துவிட்டது, இனிமேல்தான் தலைமைச் செயலர் மற்றும் அவரோடு தொடர்புடையவர்களுக்கு வேதனை தொடரப்போகிறது என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

No comments:
Write comments