தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம்மோகன் ராவின் இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் நடந்த வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கண்டனங்களையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளனர்.
ஜி.ராமகிருஷ்ணன்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதுதவிர, தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரின் அறையும் சோதனையிடப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும், அதன் தொடர்ச்சியாகவும் இந்தச் சோதனைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் நிர்வாக அமைப்பின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரி வீட்டிலும், அவருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்படுவது தமிழகத்துக்கே தலைகுனிவாகும். மேலும் வருமான வரித்துறையின் அதிரடிச் சோதனைக்கு தலைமைச் செயலாளர் உள்ளாக்கப்பட்டிருப்பதன்மூலம், அந்தப் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை அவர் இழந்துவிடுகிறார். எனவே, தமிழக அரசு உடனடியாக ராம்மோகன் ராவை தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது’ என்று அவர் கூறியுள்ளார்.
முத்தரசன்
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வருமான வரித்துறையின் சோதனையை கடுமையாக விமர்சித்துள்ளார். தலைமைச் செயலாளர் வீட்டில் நடக்கும் சோதனை என்பது அரசாங்கத்தை சோதிப்பதற்குச் சமம் என்று கூறிய முத்தரசன், சோதனை நடவடிக்கைக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சோதனையில் கைப்பற்றப்பட்டவை என்ன? என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் முத்தரசன் கோரியுள்ளார்.

No comments:
Write comments