தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில் நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச்சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் மோதும் விளையாட்டு இது. ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதை சட்ட பூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும், மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச்சண்டை கருதப்பட்டுவருகிறது.
தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனை கொண்டாடுகிறார்கள். காளைச்சண்டையில் மோதுவதற்காகவே காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் எடை 400 கிலோவிலிருந்து 600 கிலோ வரை இருக்கும். அதே போல் காளைச்சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும் பிரத்யேகமாக பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ என்று அழைக்கிறார்கள்.
ஸ்பானியா மொழியில் டோரியோ என்றால் மாடுகளை கொல்பவர் என்று பொருள். இவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கென தனி மையங்களும் ஸ்பெயினில் இருக்கின்றது. காளைச்சண்டையில் பங்குபெறும் மாடுகள் போட்டியின்போது வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும் கொல்லப்படும். சில நேரங்களில் துணிச்சலாக சண்டையிடும் காளைகளுக்கு மன்னிப்புப் பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த கருணையை பெறும் காளைகள் மட்டுமே உயிருடன் வீடு திரும்பும். காளைச்சண்டை ஆபத்தான, விலங்குகளை துன்புறுத்தும் விளையாட்டு என்று கூறி பீட்டா அமைப்பின் ஸ்பெயின் நாட்டு பிரிவு தொடர்ந்து பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேட்டலோனியா பிராந்தியத்தின் சட்டப்பேரவை காளைச்சண்டைக்கு கடந்த ஆண்டு தடைவிதித்தது.
ஆனால் ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்த தடையை விலக்கி உத்தரவிட்டது. காளைச்சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்து வரும் வழக்கத்தை உடனடியாக தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில் காளைச்சண்டையின் பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:
Write comments