கருணாநிதி கரத்தை வலுப்படுத்த திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்யுங்கள் என்று காயல்பட்டினத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு சம்சுதீன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர்முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் கருணாநிதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார். தற்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தினந்தோறும் கொலை, கொள்ளைகள் நடந்து வருகின்றன. இதை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு காலத்தில் தமிழக போலீசுக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது. தற்போது தமிழ்நாட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்கு வரும் நிலைமை ஏற்பட்டு விட்டது.
ஜெயலலிதா சிறுபான்மை மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. அ.தி.மு.க. பொதுக்குழுவில் முஸ்லிம்களுக்கு எதிரான பொதுசிவல் சட்டம் கொண்டு வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் இதுவரை வாபஸ்பெறவில்லை. ஜெயலலிதா சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான சலுகையும் செய்தது இல்லை. தி.மு.க. தலைவர் கலைஞர் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக உள்ளார். கருணாநிதி கரத்தை வலுப்படுத்த திருச்செந்தூர் தொகுதியில் வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என காதர் முகைதீன் பேசினார்.
கூட்டத்தில் திருச்செந்தூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் ஹசன், வாவு சித்திக், பாஜீஸ் அஸ்ரப், தி.மு.க. நகர செயலாளர் ஜெய்னுதீன், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments