
பெண்களுக்கெதிரான குற்றங்களை குறையவேண்டுமென்றால் அரபு நாடுகளில் இருக்கும் சட்டத்தைப்போல் சட்டம் இயற்றப்படவேண்டும் என நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
கேரள சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்ற கருத்தும் வலுத்துவருகிறது. இது தொடர்பாக நடிகை ப்ரியாமணி கூறும்போதும் "ஜிஷா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று நினைக்கிறேன். இதே நிலை தொடர்ந்து இருக்குமேயானால் நாட்டில் பெண்கள் நிம்மதியாக வாழ முடியாது.
பெண்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான நாடுகளுக்கு செல்ல வேண்டியது தான். பெண்களுக்கு மதிப்பு கொடுத்து அவ்ர்களை தெய்வமாக வணங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் எப்படி பெண்களை இந்த அளவு கொடூரமாக கற்பழித்து கொலை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதே போன்ற சம்பவங்கள் குறைய வேண்டுமென்றால் அரபு நாடுகளில் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு வழங்கபடும் தண்டனை முறையை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே சாத்தியம்" என்று கூறியுள்ளார்.
ப்ரியாமணியின் இந்த கூற்றுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகிறது. அரபு நாடுகளில் உள்ள சட்டதிட்டங்கள் பல நமது நாட்டிற்கு முரண்பட்டு இருந்தாலும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என அதிகமானோர் கருத்து தெரிவிக்க துவங்கிவிட்டனர். இல்லையேல் இது போன்ற ஒவ்வொரு குற்றங்கள் நடந்த பின்னர் அதை பற்றி சிறிது காலம் பேசிவிட்டு பின்னர் அதை மறந்துவிடுகின்றோம் ஆனால் இந்த வகையான குற்றங்கள் இந்தியாவில் குறைந்தபாடில்லை என்று கருத்துக்கள் வலுத்துவருகிறது. இதே கருத்தை மலையாள நடிகரும் பா.ஜ.கவின் உறுப்பினருமான சுரேஷ் கோபியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments