வங்கதேசத்தில் சிறுபான்மை சமுதாயத்தவர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது. தற்போது நித்யரஞ்சன் பாண்டே கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாயத்பூர் மாவட்டத்தில் உள்ள பாப்னா என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆசிரம் ஒன்றில் கடந்த 40 வருடங்களாக சேவை புரிந்துவந்தவர் நித்யரஞ்சன். இன்று காலை வழக்கமாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கத்தி, அரிவாள்களுடன் வந்த ஒரு மர்ம கும்பல் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது. இதற்கு முன்பு நடந்த கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளே இந்த கொலை சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் ஆலம்கிர் கபீர் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
இந்து பூஜாரி கொலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மற்றொருவர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது. கடந்த வாரம் கிறிஸ்தவ வணிகரின் கடைக்குள் புகுந்த சில மர்ம நபர்கள் அவரை வெட்டி கொன்றது குறிப்பிடத்தக்கது. நாடு தழுவிய அளவில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களில் ஈடுபடுவோர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தருவோம் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கொலை சம்பவத்தில் ஐ.எஸ் அமைப்பின் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

No comments:
Write comments