இந்நிலையில் இந்த வாட்ஸ்ஆப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என சுதீர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த பொதுநல மனுவில்; கடந்த ஏப்ரல் 5-ந்தேதி முதல் வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பப்படும் தகவல்களை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே பார்க்க, படிக்க முடியும். அப்படி பரிமாறப்படும் தகவல்களை வாட்ஸ் ஆப் நிறுவனமோ மற்ற யாருமோ பெறவோ, படிக்கவோ முடியாது. இதனால் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு உளவு நிறுவனங்களால் வாட்ஸ்ஆப் வழியாக செய்யப்படும் அழைப்புகள், வீடியோ, படங்கள் மற்றும் ஆவணங்களை தேச பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளுக்காக கண்டுபிடிக்க முடியாது. மேலும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் எனப்படும் அதிநவீன கணினிகளாலும் கூட இந்த உரையாடல்களையோ, ஆவணங்களையோ இடைமறித்து கண்டுபிடிக்க முடியாது.
தற்போது வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ள ‘256 பிட் என்கிரிப்ட்' எனப்படும் ஒரு சங்கேத குறியீட்டை இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம். இத்தகைய வசதி பயங்கரவாதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் உதவும் வகையில் அமைந்து விடும் ஆபத்துள்ளது. இது தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே வாட்ஸ் அப் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ்ஆப்பை போன்ற வைபர், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு முன்பு வரும் 29-ந்தேதி (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

No comments:
Write comments