சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ் - சிவ்பால் யாதவ் மோதல் காரணமாக சிவ்பால் யாதவ் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தநிலையில் தன்னுடைய மவுனத்தை களைத்த கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ, “நான் இருக்கும் வரையில் சமாஜ்வாடி கட்சியில் பிரிவு இருக்க முடியாது,” என்று கூறிஉள்ளார்.
உத்தரபிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி அரசு நடைபெற்று வருகிறது. மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவருடைய சித்தப்பாவும், மந்திரியுமான சிவ்பால்சிங் யாதவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலை தணிப்பதற்காக, கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ், நடவடிக்கையை மேற்கொண்டார். தன் மகனான முதல்–மந்திரி அகிலேஷ் யாதவையும், தம்பி சிவபால்சிங் யாதவையும் தனித்தனியாக நேரில் அழைத்து பேசினார். ஆனால், அதில் சமரசம் ஏற்படவில்லை.
இதனையடுத்து, சிவ்பால்சிங் யாதவ், தனது கேபினட் மந்திரி பதவியையும், மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக கூறினார். இரண்டு ராஜினாமா கடிதங்களையும் முலாயம்சிங் யாதவிடம் சமர்ப்பித்தார். இதனையடுத்து முலாயம் சிங் யாதவ் வீட்டின் முன்னதாக சிவ்பால் சிங் யாதவ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். சிவ்பால் யாதவ் பேசுகையில், “நாம் அனைவரும் சமாஜ்வாடி கட்சியை பலப்படுத்த வேண்டும். நாம் முலாயம் சிங் யாதவுடன் நிற்கவேண்டும். அவருடைய தகவல் நமக்கு உத்தரவு. நாம் கட்சியை பலவினமாக்க கூடாது. எந்தஒரு சூழ்நிலையிலும் நாம் முலாயம் சிங் யாதவுடன் நிற்கவேண்டும்,” என்று கூறினார்.
இப்போது இவ்விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்த கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், நாம் அனைவரும் மிகப்பெரிய குடும்பம், வேறுபாடு எழலாம்... சிவ்பால் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே எந்தஒரு மோதலும் கிடையாது. அகிலேஷ் யாதவ், சிவ்பால் யாதவை அவருடைய வீட்டில் சந்திப்பார். தேர்தல் நேரத்தில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சமாஜ்வாடி கட்சி ஒரு குடும்பம் போன்றது, எந்தஒரு வேறுபாடும் இருக்க கூடாது, என்றார். “நான் இருக்கும் வரையில் சமாஜ்வாடி கட்சியில் பிரிவு இருக்க முடியாது,” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் சமாஜ்வாடி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி பிரஜாபதிக்கு ஆதரவு தெரிவித்து உள்ள முலாயம் சிங் யாதவ், விரைவில் அவர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவைக்கு திரும்புவார் என்று கூறிஉள்ளனர்.

No comments:
Write comments