மலேசியாவின் இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் ரயானி ஏர் விமானத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் ரயானி ஏர் விமானங்கள் விதிமுறைகளை மீறியதால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு சோதனை விதிகள் மற்றும் நிர்வாகம் குறித்த கவலைகள் காரணமாக ரயானி ஏர் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கூறிஉள்ளது. ரயானி ஏர் விமானங்கள் காலதாமதமாக செல்லுதல் மற்றும் ரத்து செய்யப்படுதல் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மலேசியா விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் பாதுகாப்பு சோதனை விதிகள் மற்றும் நிர்வாகம் குறித்த கவலைகள் காரணமாக உரிமத்தை ரத்து செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த விமான நிறுவனம், ஹலால் உணவை மட்டுமே பரிமாறியது. பயணிகளுக்கு மது தரப்படுவதில்லை. மேலும், விமானப் பணியாளர்கள் அடக்கமாக உடை உடுத்தியிருப்பார்கள். இரண்டு போயிங் 737-400 விமானங்களையும், எட்டு விமானிகளையும், 50 ஊழியர்களையும் வைத்திருந்தது இந்த நிறுவனம். லங்காவி என்ற தீவிலிருந்து இயங்கிய இந்த நிறுவனம், தலைநகர் கோலாலம்பூருக்கும், வடபகுதி நகரான கோடா பஹ்ரூவுக்கும் விமானங்களை இயக்கியது.
கடந்த ஏப்ரல் மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்று நிறுவன ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியதும் நிறுவனத்திற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா இரண்டு விமான பேரழிவை சந்தித்த பின்னர் இந்நடவடிக்கையை எடுத்து உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலையில் நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-200 ரக பயணிகள் விமானம் கிழக்கு உக்ரைனில் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங் நோக்கி, 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 மாயமானது. விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments