பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை காலணியில் வைத்து வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் கூறும்போது,
"ஒரு வித்யாசமான தேர்தல் நடந்து முடிந்துள்ளது, பணத்தை வாரி இறைத்து அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு காசு கொடுக்காமல் பா.ம.க 23 லட்சம் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எங்களுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலில் போட்டியிட்டவர்கள், தொண்டர்கள், வாக்களித்தவர்கள் என அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள், பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் எங்களுடைய கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. எங்களுடைய தேர்தல் அறிக்கையை முன்மாதிரியாக வைத்துத்தான் அதிமுகவும் திமுகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை தயாரித்தது.
பணம், ஊடகம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் சேர்ந்து தான் பா.ம.கவை தோற்கடித்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடைபெற்றதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது. வாக்களர்களுக்கு பணத்தை கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதை விட்டுவிட்டு தேர்தலையே ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்குத்தான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் இருக்கிறது. இப்படி ஒரு தேர்தல் ஆணையத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் எப்படி சாதிக்க முடியும்? ஆயிரக்கணக்கான புகார்கள் கொடுத்தோம் ஒரு புகாருக்கு கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாவது நேர்மையாக நடத்தப்படவேண்டும் என்பதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நிச்சயமாக் மாற்றம் வரும் என அன்புமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் கூறும்போது " தேர்தலில் தோற்றதால் எங்களுக்கு கோபமோ ஆத்திரமோ இல்லை, ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறோம் அவ்வளவுதான். இந்த தேர்தலில் நடுநிலையாளர்கள் வாக்களித்திருந்தால் அன்புமணி முதல்வராக ஆகியிருப்பார். 5 லட்சத்திற்குமேற்பட்டவர்கள் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளார்கள். அப்படி வாக்களித்தவர்கள் படித்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். அரசியல் சாக்கடை என்று கூறுகிறீர்கள் ஆனால் ஓட்டுப்போடாமல் விடுமுறை கிடைக்குதே என்று கருதி சொந்த ஊருக்கு பயணம் செய்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் எப்படி வரும்? என்று கூறினார்.
ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும், இதை தவறியவர்களின் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவை பறிமுதல் செய்யப்படும் என சட்டதிருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று ராமதாஸ் கூறினார். இக்கூட்டத்தில் ஜி.கே மணி, ஏ.கே மூர்த்தி என பா.ம.கவின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments