முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ரூ. 95 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று 22ஆம் தேதி மஹா சம்ரோஷணம் நடைபெறுகிறது.
இதையொட்டி கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதானமிக்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ யோகநரசிம்மர், ஸ்ரீவரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார் மற்றும் குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின்கோபுர வாசல் விமானம், பாண்டி கோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் விமானம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவு ஆணைக்கிணங்கிணங்க திருப்பணிகள் 10.7.2016 அன்று துவங்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, துன்முகி வருடம் ஆவணி மாதம் 2ம் தேதி (18.8.2016) மாலை யாகசாலை துவங்கப்பட்டு ஆவணி மாதம் 6ம் தேதி (22.8.2016) மஹா சம்ரோக்ஷ்ணம் நடைபெறவுள்ளது. இத்திருப்பணிகள் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி, 95 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ரூ.55 லட்சம் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், ஸ்ரீசடகோபம், கவசங்களுக்கு தங்கரேக் பதிக்கும் பணியும், கோபுர கலசங்களுக்கு தங்கநீர் தோய்க்கும் பணியும் மற்றும் முதல் முறையாக ஸ்ரீநரசிம்மஸ்வாமிக்கு சொர்ணபந்தனமும், ஸ்ரீகஜேந்திரவரதராஜசுவாமிக்கு ரஜத பந்தனமும் பொருத்தப்படவுள்ளது. மேலும் காவல்துறை, சென்னை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை ஆகியோருடன் இணைந்து பாதுகாப்பு பணிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முனைவர் மா.வீரசண்முகமணி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கோவிலின் துணை ஆணையர் ஜோதிலட்சுமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தார்.

No comments:
Write comments