ஜல்லிக்கட்டு விளையாட்டை இவ்வருடம் நடத்துவது தொடர்பான முயற்சியில் மத்திய சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தராராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தமிழர் பண்பாடு உடன் கூடிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேன்டுமென்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு முயற்சி எடுத்தது. ஆனால் அதற்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட சட்ட சிக்கல்களாலும், உச்ச நீதிமன்ற வழக்கினாலும் போட்டியை நடத்த முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு அனைத்து சிக்கல்களையும் மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளில் சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்த வேண்டும் என்ற பா.ஜ.கவின் முயற்சிகளுக்கு பிற தேசிய கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவையும் தெரிவித்துள்ளன. மத்திய பா.ஜ.க அரசும், தமிழக பா.ஜ.கவும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை வந்திருந்த பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமிக்க விளையாட்டு போட்டியாக இருந்தாலும் அது அபாயகரமான போட்டி. அதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்ததோடு, தமிழக பா.ஜ.கவின் தலைவர்கள் இவ்விஷயத்தில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

No comments:
Write comments