குஜராத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் களத்தை சந்தித்து வெற்றிபெற்றது. இதனை அடுத்து கடந்த 2 வருடங்களாக ஆனந்திபென் படேல் குஜராத் முதலமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் உனா மாவட்டத்தில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக தலித் இளைஞர்கள் தாக்கபப்ட்ட விவகாரம் அம்மாநிலத்தில் கடும் விளைவை ஏற்படுத்தியது. குஜராத்தையும் தவிர்த்து பீஹார், உத்திரபிரதேசம் என தலித்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்தது. குஜராத்தில் தலித் சமூகத்தினர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்காக மாநிலம் தழுவிய போராட்டங்கள் வெடித்தது. இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக கடும் தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க அரசு தலித் விரோத போக்குகளில் செயல்பட்டுவருவதாக உத்திரபிரதேச முன்னாள் முதல்வரும் ராஜ்யசபா எம்.பியுமான மாயாவதி கூறினார். பா.ஜ.கவில் இருந்துவரும் தலித்கள் அனைவரும் அக்கட்சியிலிருந்து விலகிவிடுங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
பசுபாதுகாவலர்கள் என தங்களை கூறிக்கொண்டு சிறுபான்மை சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்திவருபவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காததால் தான் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், இச்சம்பவத்திற்கு பா.ஜ.க மறைமுகமாக ஆதரித்து வருவதால் தான் அவர்கள் தைரியமாக செயல்படுகிறார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டது. தலித்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் குஜராத் பா.ஜ.க அரசின் மக்கள் செல்வாக்கு வெகுவாக குறையத்துவங்கியுள்ளது. இதனை அடுத்து அம்மாநில முதலமைச்சர் ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனை தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருக்கிறார்.
இன்று புதுடெல்லியில் அமித்ஷா தலைமையிலான பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் ஆனந்திபென் அளித்த ராஜினாமா கடிதம் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரன்புரா தொகுதி எம்.எல்.ஏ மற்றும் தேசியத்தலைவராக செயல்பட்டுவரும் அமித்ஷாவே அடுத்த முதல்வராக ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இருந்த போதிலும் கட்சியின் தேசிய தலைவராக இருந்து கொண்டு மாநில முதல்வர் பொறுப்புக்கு அமர்த்தப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அனுமதிப்பாரா என்பது சந்தேகமே என தெரிவிக்கின்றனர். காரணம் இன்னும் சில மாதங்களில் உத்திரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சட்டமன்றதேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி இந்த சமயத்தில் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பிற்கு புதிய ஆளை கொண்டு வருவது சரியாக இருக்காது என பலரும் கருதுகின்றனர்.
பா.ஜ.கவின் தேசிய துணைத்தலைவர் புருஷோத்தம் உபாலா, குஜராத் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிதின் படேல், குஜராத் மாநில பா.ஜ.க தலைவர் விஜய் ரூபானி, பொதுச்செயலாளர் பிகுபாய் தல்சானியா மற்றும் அமைச்சர் சங்கர் செளதிரி ஆகோயரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும் பா.ஜ.க தலைமை ஓரிரு நாட்களில் அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments