சமுத்திரகனி விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த படங்களில் புரட்சிகர வசனங்கள், பெற்றோர், பிள்ளைகள், ஆசிரியர்கள், சக மனிதர்கள் என அனைவருக்கு வாழ்க்கையின் தத்துவத்தை பயிற்றுவிக்கக்கூடிய சிறந்த வசனங்களை தன் படத்தில் வைத்திருப்பார். அந்த வகையில் தற்போது அவரது படைப்பில் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்து வரும் படம் 'அப்பா'.
உலகத்திலேயே அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியா, அதிலும் மாநில அளவில் தமிழகம் தான் முதல் இடத்தில் இருக்கிறது என்ற அதிர்ச்சி தரக்கூடிய உண்மையை வெளியிட்டிருக்கிறார். 10ஆம் வகுப்பு தேர்வும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது தமிழகத்தின் ஏதாவது ஒரு ஊர்களில் தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் இன்னமும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பெற்றோர்களின் கெடுபிடிகளால் விரக்திக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறத்தான் செய்கிறது.
இதனையே கருவாக கொண்டு சமுத்திரகனி தனது 'அப்பா' திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஒரு தகப்பனாக தன் மகனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறார். ஒவ்வொரு பெற்றோர்கள் தன் பிள்ளைகளினுடைய நலனுக்காக மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், பிறர் என்ன சொல்வார்களோ? என்கிற எண்ணத்தில் நமது பிள்ளைகளிடம் நமது ஆசைகளை திணிக்க கூடாது என்பதையும் உணர்த்தியிருக்கிறார். பள்ளிக்கூடத்தில் படித்த நல்ல மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்வாகி கை நிறைய சம்பளம் வாங்கினால் மட்டுமே ஒரு மாணவன் வெற்றி பெற்றவன் என்ற மாயை உடைத்தெறிந்திருக்கிறார்.
படத்தில் தன் மகனுக்கு பள்ளி பாடத்தை கற்றுக்கொடுப்பதை விட வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கிறார். தன் மகனின் ஒவ்வொரு வயதும் செல்லச் செல்ல அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் மன மாற்றத்தை எவ்வாறு ஒரு பெற்றோராக இருந்து எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறார். பருவ வயதில் ஒரு பெண்ணை பார்த்ததும் ஏற்படும் ஒருவிதமான பதட்டம், ஓரப்பார்வை போன்றவை பின்னர் விபரீதமான காரியங்களுக்கு இட்டுச்செல்லும் என்பதை தன் மகனுக்கு உணர்த்தும் போது 'அப்பா' என்பவர் வெறும் கண்டிப்புடன் மட்டுமே செயல்படுபவர் என்ற பிம்பத்தை மாற்றியிருக்கிறது.
ஒரு சில நடிகர்களை தவிர முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே படத்தை தயாரித்துள்ளார். படத்தில் ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களும் முத்துக்களாய் பதிந்துள்ளது. தனது பிள்ளையை ஒரு குறிப்பிட்ட வயது வரை நல்ல முறையில், நல்லொழுக்கத்துடன் வளர்த்துவிட்டால் பின்னர் தன் தந்தையே நினைத்தாலும் தன் மகனவை வழி கெடுக்கமுடியாது என்பதை உணர்த்தும் வகையில் தன் மகனிடம் தெரிவிக்கும் காட்சி பல அப்பாக்களுக்கும் வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தியிருக்கும்.
இந்தப்படத்தில் மற்றொரு பலம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள். படத்தை முழுமையாக எடுத்துவிட்ட பின்னரே படத்திற்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை அனுகியிருக்கிறார் சமுத்திரகனி. ஒரு பிள்ளை தான் எந்த துரையில் பயணிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கே உரியது என்பதை உணர்த்தும் திரைப்படம் இதற்கு முன்பு வந்திருந்தாலும் அவை அனைத்தும் மசாலா படங்களாகவே இருந்திருக்கின்றனர். இந்தப்படம் பார்த்தோ ஓர் மன நிம்மதி அடைந்தோம் என்று சொல்லும் அளவிற்கு தனக்கே உரித்தான பாணியில் தயாரித்திருக்கிறார்.

No comments:
Write comments