பசுகாவலர்களால் இந்தியாவின் பல பகுதிகளில் இஸ்லாமியர்களும் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என வெல்பேர் பார்ட்டி வலியுறுத்தியுள்ளது.
பசுகாவலர்களால் குஜாத், மத்தியபிரதேசம், ஆந்திரா,கர்நாடகா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் தலித் சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல்வேறு நெருக்கடிகள், கண்டனங்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரத்தை முதன் முறையாக கண்டித்து பேசினார். தெலுங்கானா பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர் "உங்களுக்கு கொல்ல வேண்டுமானால், என்னை கொல்லுங்கள், என்னுடைய தலித் சகோதரர்களை ஒன்றும் செய்யாதீர்கள்' என்று கூறினார். பிரதமரின் இந்த பேச்சு அரசியல் தந்திரம் என்றும், தலித் சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகள் முற்றிப்போன சமயத்தில் இவ்வாறான கருத்துக்களை அரசியல் லாபம் அடையவே தெரிவித்திருக்கிறார் என பலரும் குற்றஞ்சாட்டினர்.
என்னுடைய தலித் சகோதரர்களை தாக்காதீர்கள், வேண்டுமானால் என்னை தாக்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளீர்கள், அப்படியானால் இதற்கு முன்பு பல்வேறு இடங்களில் பசுகாவலர்களால் இஸ்லாமியர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்களே! அது தொடர்பாக ஏன் மவுனம் காத்து வருகிறீர்கள்? இஸ்லாமியர்கள் உங்களுடைய சகோதரர்கள் இல்லையா? இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைபாடு என்ன என்று வெல்பேர் பார்டியின் பொதுச்செயலாளர் ஹம்ஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தன்னுடைய சகோதரர்களாக, சகோதரிகளாக நம்முடைய பிரதமர் பாவிக்கிறார்? இஸ்லாமியர்கள் தாக்கபட்ட விவகாரத்தில் ஏன் இன்னமும் மவுனமாக இருக்கிறார்? என ஹம்ஜா கேள்வி கேட்டுள்ளார். அரசியல் வற்புறுத்தலின் அடிப்படையிலேயே மோடி இத்தகைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். வருகின்ற தேர்தல்களில் தலித் சமூகத்தினரின் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக பேசிய பேச்சாகவே தெரிகிறது என ஹம்ஜா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments