கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நக்ஸல் தீவிரவாதி, பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, பஸ்தர் மாவட்டத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த சந்தோமேதா வனப் பகுதியில் கடந்த 5 நாள்களாக பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், துப்பாக்கிச் சண்டையை எதிர்கொள்ள முடியாமல் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். நக்ஸல்கள் பதுங்கி இருந்த இடத்தில் பார்த்தபோது, குண்டு பாய்ந்து உயிரிழந்த தீவிரவாதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அருகில் உள்ள கிராமத்தினர் மூலம் அவரது பெயர் அர்ஜுன் என்பது தெரியவந்தது. அவர், கடந்த 2014-ஆம் ஆண்டில், பஸ்தர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் ஆவார். அந்தத் தாக்குதலில் துணை இராணுவப் படையினரான மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 5 பேரும், ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் உயிரிழந்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:
Write comments