குஜராத் உனாவில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக தலித்துகள் தாக்கப்பட்டது நாடு முழுக்க தலித்துகள், ஜனநாயக சக்திகளிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதற்கேற்ப மிக பெரியளவில் தலித்துகள் தாக்குதலைக் கண்டித்து குஜராத்தில் தலித் மக்கள் பேரணி நடத்தினர். குஜராத் மாநிலத்தில் மட்டும் பாஜக-வின் 13 ஆண்டுகால ஆட்சியில் 14,613 வழக்குகள் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைகள் காரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படும் விவகாரத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு எழுப்பியுள்ளது.
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி, அக்கட்சித் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், மாநில சட்டப்பேரவை கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை டெல்லியில் நேற்று சந்தித்தனர். அவரிடம் தலித்துகள் குஜராத்தில் தாக்கப்படும் புள்ளி விவரங்கள் அடங்கிய மனுவைக் கொடுத்தனர். குஜராத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்ற சம்பவங்கள் தொகுப்பு அடங்கிய ஒரு ஆவணத்தையும் கொடுத்து, ‘உனாவில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் சதித் திட்டம் தீட்டியவர் மீது 30 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பேசும் பரத்சிங் சோலங்கி, “குஜராத்தில் தலித்துகள், பாடிதார்கள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் ஆகியோர் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், பாஜக மௌனம் காக்கிறது. வேடிக்கை பார்க்கிறது. ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மனிதத்தன்மையற்ற ஒடுக்குமுறைகள் தலித்துகள் மீது ஏவப்பட்டிருக்கும் நிலையில் பாஜக அரசு மெத்தனமாக உள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் பிரிட்டீஷாரின் ஆட்சியில்கூட நடைபெற்றதில்லை.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பலுசிஸ்தான் பகுதி மக்களைப் பற்றி பிரதமர் சிந்திக்கிறார். ஆனால், அவரது சொந்த மாநிலத்தில் தலித்துகள், பாடிதார்கள், சிறுபான்மையினர், ஆதிவாசிகள் ஆகியோர் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது அவர்களைச் சந்திக்கக்கூட அவருக்கு நேரமில்லை. பாஜக தற்போது முதல்வரை மாற்றியுள்ளது. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை ஆகும். மற்றொரு முக்கிய விஷயம் பிரதமர் மோடி முன்பு குஜராத்தின் முதல்வராக இருந்தபோதுதான் தங்காட் பகுதியில் மூன்று தலித்துகள் கொல்லப்பட்டனர். அப்போது அந்தக் குற்றவாளிகள் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு பிரதமர் மோடி தற்போது, ‘நீங்கள் தலித்துகளைச் சுட விரும்பினால் என்னைச் சுடுங்கள்’ என்று சொல்கிறார். அவருக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலித்துகளுக்குதான் பாதுகாப்பு இல்லை” என்றார் சோலங்கி.

No comments:
Write comments