இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிந்துதான் ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளார். அதை மாத்திரை வடிவில் அவர் உட்கொண்டுள்ளார் என விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நர்சிங் யாதவ் உடலில் ஊக்கமருந்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், ஊக்கமருந்தை மாத்திரை வடிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எடுத்துக்கொண்டால் மட்டுமே உடலில் ஊக்கமருந்தின் அளவு இத்தகைய அளவுக்கு இருக்கும் என்றும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு சமர்ப்பித்துள்ள ஆதாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 25 மற்றும் ஜூலை 5-ஆம் தேதிகளில் நர்சிங் யாதவின் சிறுநீர் மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், அவர் ஊக்கமருந்தை நீண்ட நாள்களாக பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக்கும் மேலாக, தனது உணவில் ஊக்கமருந்து கலக்கப்பட்டதாக கூறும் நர்சிங் யாதவ், அதுதொடர்பாக வலுவான ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. எனினும், இந்த விவகாரத்தில் ஜிதேஷ் என்பவருக்கு எதிராக நர்சிங் யாதவ் வழக்குப் பதிவு செய்துள்ளதை கருத்தில் கொண்டுள்ளோம்.
அந்த வழக்கு விசாரணையில் நர்சிங் யாதவுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில், இந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் மறு ஆய்வு செய்யும் என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து குற்றச்சாட்டில் நர்சிங் யாதவுக்கு எதிராக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மேல்முறையீடு செய்ததை அடுத்து, நர்சிங் யாதவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments