காஷ்மீர் தொடர்பான இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் அவர்கள் எழுதிய கட்டுரை.
நம் தாய்த்திருநாட்டின் மணி மகுடம் காஷ்மீர். ரிஷி கஷ்யப முனிவரின் பெயரில் காஷ்மீரம் என அழைக்கப்பட்டது. சரஸ்வதி தேவியின் அருளாட்சி காஷ்மீர் பள்ளத்தாக்கில் எப்போதும் கோலோச்சி வருகின்றது. இமயமலைச் சாரலில் பனிமலை சிகரங்கள் அழகு சேர்க்க பூலோக சொர்க்கமாக திகழ்வது ஸ்ரீநகர்.
காஷ்மீர் மக்களின் கலாசாரம் பழமையானது. கடும் குளிரையும் உறை பனியையும் உழைப்பால் வென்றவர்கள் காஷ்மீர் மக்கள். படித்தவர்களை பண்டிதர்கள் என்பார்கள். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர் என்கிற மாபெரும் தலைவர் பண்டிதர் பட்டம் பெற்றவர். தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்.
தற்போது காஷ்மீரில் வசிப்பவர்கள் பண்டிதர்கள். அதாவது பிராமணர்கள். காஷ்மீர் பிரச்னை என்பது பிராமணர்களின் பிரச்னை என தவறான திசை திருப்பப்பட்டு அவதூறு பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மூதாதையர்கள் காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மகான் ஆதிசங்கரர் தவம் செய்த மலைக்குகை ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் உள்ள தால் ஏரிக்கரையில் உள்ளது. தற்போது இதனை சுலைமான் குகை என பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர்.
காஷ்மீர் மொழியில் ஏராளமான இலக்கியங்களும் வீரசைவ சித்தாந்தங்களும் உள்ளன. மகான் இராமனுஜர் தான் எழுதிய ஸ்ரீபாஷ்யத்தை காஷ்மீர் சரஸ்வதி பீடத்தில் வைத்தபோது, கலைமகள் அதனை தன் தலையில் சூடி அங்கீகரித்தாளாம். மொகலாயர்கள், துருக்கியர்களின் படையெடுப்பின்போது காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
சக்தி பீடங்களும், ராமாயண மஹாபாரத தொடர்புடைய புண்ணியத்தலங்களும் அமர்நாத் பனி லிங்க குகை கோயிலும் காஷ்மீரத்தின் பூர்வகுடிகள் இந்துக்களே என்பதை நிலைநாட்டுகின்றன. அந்நியப் படையெடுப்பின்போது கோயில்கள் சூறையாடப்பட்டன. காஷ்மீர் மக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.
சீக்கிய மதத்தின் எட்டாவது குரு தேஹ்பகதூர், காஷ்மீர் இந்துக்களை காப்பதற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். சீக்கிய மதத்தைச் சேர்ந்த ராஜா ரஞ்சித்சிங் காஷ்மீரை ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து மீட்க போர் புரிந்துள்ளார். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு கோவிந்த்சிங் காஷ்மீரை காப்பாற்ற யுத்தம் புரிந்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட காஷ்மீரில் பெரும்பான்மையாக இந்துக்கள்தான் வசித்து வந்தனர். பிரிவினையின் போது காஷ்மீர் மஹாராஜ ஹரிசிங் நிபந்தனையற்ற முறையில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார். அதற்குக் காரணம், சுதந்திரம் பெற்ற உடனேயே பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்கத் துவங்கியது.
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இந்திய ராணுவத்தினர் வெற்றி பெற்று காஷ்மீரைக் காப்பாற்றினர். இந்திய ராணுவம் போரில் வெற்றி பெற்று கொண்டிருக்கும்போதே முழுமையான காஷ்மீர் மீட்கப்படும் முன்பாக ஜவாஹர்லால் நேரு போர் நிறுத்த அறிவிப்பு செய்தார். இப்பிரச்னையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றார். இதன் காரணமாக இன்றளவும் காஷ்மீர் பிரச்னை நீடிக்கின்றது.
காஷ்மீரை பூகோள ரீதியாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று - இன்றும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஜம்மு பகுதி, இரண்டு - முழுமையாக இந்துக்களும், சீக்கியர்களும் விரட்டியடிக்கப்பட்டு முஸ்லிம்கள் மட்டுமே வாழுகின்ற ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு, மூன்று - பெளத்தர்களும் ஷியா முஸ்லிம்களும் கணிசமாக வாழுகின்ற லடாக் பகுதி.
கடந்த பத்து ஆண்டுகளுக்குள்ளாக ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களும் முழுமையாக முஸ்லிம் மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியில் காஷ்மீர் மொழி முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. உருது மொழியும் அரபு மொழியும் மட்டுமே மக்களின் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் உள்ளன. பெரும்பாலான இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு விட்டன.
1948-இல் மூன்றில் ஒருபங்கு காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இதனை "ஆசாத் காஷ்மீர்' என பாகிஸ்தான் சொல்கிறது. நாம் இதனை "பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்' என்று சொல்கிறோம். இதில் ஒரு பகுதியை பாகிஸ்தான் சீனாவிற்கு கொடுத்துள்ளது. இப்பகுதி "அக்சய்சின்' என அழைக்கப்படுகிறது.
இப்பகுதியில் சீன ராணுவம் சாலை வசதிகளை அமைத்து தனது போர்த்தளவாடங்களை குவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியிலிருந்துதான் பயங்கரவாதம் உலகம் முழுக்க பரவி வருகின்றது.
இங்கு பாகிஸ்தான் அரசு ஏராளமான பயிற்சி முகாம்களை பயங்கரவாதிகளுக்காக நடத்தி வருகின்றது. காஷ்மீர் இளைஞர்களுக்கும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கும் மூளைச்சலவை செய்தும் பண ஆசை காட்டியும் ஆயுதப்பயிற்சி கொடுத்தும் அவர்களை ஜிகாத் பயங்கரவாதிகளாக மாற்றி இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்து கொடிய பயங்கரவாதச் செயல்களை இந்தியாவிற்குள் நடத்தி வருகின்றனர்.
பாரத நாட்டில் உள்ள சில அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளும், கம்யூனிச இடதுசாரி நக்ஸல் அமைப்புக்களும், திராவிடர் கழகங்களும் சில மனித உரிமை அமைப்புக்களும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இந்திய ராணுவத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வது வேதனையாக உள்ளது.
ஸ்ரீநகரில் கலவரக்காரர்கள் பாகிஸ்தான் கொடியை உயர்த்திப்பிடிக்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை காட்டுகின்றனர். இந்திய தேசிய கொடியை எரிக்கின்றனர். பெண்களையும் குழந்தைகளையும் முன்நிறுத்தி ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.
கலவரக்காரர்கள் இயந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி, பொது மக்களையும் போலீஸாரையும், ராணுவத்தினரையும் தாக்கலாம். ஆனால் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கிகளை பயன்படுத்தக் கூடாது.
தற்போது "பெல்லட்' ரக துப்பாக்கி அதாவது குண்டுகளுக்கு பதிலாக உயிர்ச்சேதம் ஏற்படுத்தாத கற்களை தோட்டாக்களாக பயன்படுத்தும் துப்பாக்கியையும் ராணுவத்தினர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐயோ பாவம் காவல் துறையும் ராணுவ வீரர்களும் கல்லடிபட்டு சாக வேண்டியதுதானா?
காஷ்மீரில் இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள், ஒரு கிராமத்தில் சீக்கியர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இவற்றைக் கேட்பதற்கு நாதியில்லை. ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியில் வேலையின்மை, வறுமை எனவே இளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்றெல்லாம் தவறான தகவலை தருகின்றனர்.
உண்மையில் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் இதுவரை நடத்தப்பட்டதும் தற்போது நடந்து கொண்டிருப்பதும் திட்டமிட்ட இனப்படுகொலையாகும். காஷ்மீர் பூர்வகுடி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். காஷ்மீர் மொழி, பண்பாடு, கலாசாரம், தொன்மைச் சின்னங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு உள்ளன.
காஷ்மீரில் கலவரக்காரர்களுக்கு தலைமை தாங்கும் பயங்கரவாதகுழுக்களின் தலைவர்களின் வாரிசுகள் அனைவரும் நன்கு படித்து வேலை வாய்ப்பு பெற்று சிறப்பாக வாழ்கின்றனர். ஆனால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் தூண்டுதல் மற்றும் உதவி மூலம் இஸ்லாமிய மதரசாக் கல்வி எனும் பெயரில் பயிற்சி கொடுத்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.
அரசியல் சாசனப்பிரிவு 370-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள காஷ்மீருக்கான விசேஷ அந்தஸ்து மூலம் கிடைக்கும் பெருவாரியான சலுகைகளை ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதி மக்களே அனுபவித்துள்ளனர். லடாக் பகுதி பெளத்தர்களும் ஷியாமுஸ்லீம்களும், ஜம்மு பகுதி இந்துக்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
காஷ்மீருக்கு ஒதுக்கப்படும் நிதி, வளர்ச்சித்திட்டங்கள் ஆகியவை பெருமளவு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியே அனுபவித்துள்ளது. ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளிலும் பயங்கரவாதிகளின் அக்கிரமங்கள் அதிகரித்து வருகின்றன.
இப்போது ஜம்முவிலும் பல மாவட்டங்களில் காஷ்மீர் பூர்வகுடி இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. நாம் நம் நாட்டைக் காக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும். ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டும்.
காஷ்மீரில் பா.ஜ.க., பி.டி.பி. கூட்டணி அரசு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட அரசாகும். தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. கூட்டணி அரசை வெறும் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கக் கூடாது. நமது ராணுவத்தினரின் மன உறுதியை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது.
காஷ்மீருக்காக நாம் கார்கில் யுத்தம் உள்பட நான்கு யுத்தங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளோம். இத்தனைக்கு பிறகும் நாம் காஷ்மீரை இழந்து காஷ்மீரிகளை பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சிந்திகள் மற்றும் பஞ்சாபிகளை போலவோ, வங்காள தேசத்தில் உள்ள சிறுபான்மை கிழக்கு வங்காளிகளை போலவோ, இலங்கையிலுள்ள சிறுபான்மை இந்து தமிழர்களை போலவோ கைவிட்டுவிடக் கூடாது.
இழப்பதற்கல்ல காஷ்மீரம், பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து காஷ்மீரைக் காப்போம். பாரதம் காப்போம்.

No comments:
Write comments