கஷ்மீரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இனி பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக மிளகாய் பொடி அடைத்துவைக்கப்பட்ட குண்டுகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த ஆரம்பம் முதலே பாதுகாப்பு படையினரும் இராணுவத்தினரும் பெல்லட் குண்டுகளை பயன்படுத்திவந்தனர். இதனால் ஆயிரக்கணக்கானோரின் கண்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் தங்களுடைய கண்பார்வையை நிரந்தரமாக இழந்தனர். இதனை தொடர்ந்து பெல்லட் குண்டுகளின் பயன்பாட்டிற்கு எதிராக கடும் கண்டன குரல்கள் எழுந்து வந்தது. பெல்லட் குண்டுகளை தவிர்த்துவிட்டு மாற்றி வழிக்கான ஏற்பாட்டினை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
தற்சமயம் பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக மிளகாய் பொடி அடைத்துவைக்கப்பட்ட குண்டுகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் வெளியிட்டார். இதனை தொடர்ந்து மிளகாய் பொடி அடங்கிய ஷெல்கள் கஷ்மீர் மாநிலத்திற்கு நாளை அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கஷ்மீர் பயணம் மேற்கொண்ட ராஜ்னாத் சிங் பெல்லட் குண்டுகளுக்கு மாற்று வழி விரைவில் கொண்டு வரப்படும் என உறுதியளித்திருந்தார். இருந்த போதிலும் அரிதான சமயங்களிலும், வன்முறைகள் கட்டுக்கடங்காமல் போகும் நிலையிலும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

No comments:
Write comments