இந்திய இராணுவ வீரர்களின் பலம் எல்லாம் அவர்கள் நடிக்கும் பாலிவுட் படங்களில் மட்டும்தான் நிஜ வாழ்க்கையில் அவர்களுடைய பலம் ஒன்றுமே இல்லை என பாகிஸ்தானின் ஜெய்ஷே-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஜார் பேசியதாக ஆடியோ டேப் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்தவாரம் ஜம்மு கஷ்மீர் மாநிலம் உரியில் இராணுவ தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இதனை முற்றிலுமாக மறுத்து வருகின்றனர். உரி தாக்குதலுக்கு ஜெய்ஷே-இ-முகமது அமைப்பினர் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவ்வமைப்பின் தலைவர் மசூத் அஜார் வெளியிட்டுள்ளதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் மசூத் அஜார் இந்தியாவையும், இந்திய இராணுவத்தையும் வெகுவாக கேலி செய்து பேசியுள்ளார். இந்திய இராணுவத்தினரின் வீரம் எல்லாம் பாலிவுட் படங்களில் தான். ஒவ்வொரு சினிமாவிலும் பாகிஸ்தான் பலம் குன்றிய நாடு போலவும், இந்தியா தான் பலமான நாடுபோலவும் சித்தரிப்பார்கள். சினிமாவில் இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான முஜாகிதீன்களை கொல்வது போலவும், ஆனால் அவர்கள் உடலில் ஒரு குண்டு அடி கூட படாதவாறு படம் எடுப்பார்கள்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் எதிர்மறையாகவே இருக்கும். 4 ஜிஹாதிகள் சேர்ந்து 20 இராணுவ வீரர்களை கொன்றுள்ளனர். அதை தான் உரியில் நடந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் உரி தாக்குதலுக்கு நாங்களே காரணம் என்பது அதில் சொல்லப்படவில்லை.
இந்தியா எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டினர். தற்போது இளைஞர்கள் இச்செய்தியை கேட்டு தங்களுடைய இயல்பான வாழ்க்கையிலிருந்து திரும்பி எங்கள் அமைப்பில் சேர்வதற்காக ஆர்வம் கொண்டுள்ளனர். எங்களுடைய கொள்கைகள் அவர்களை வெகுவாக கவந்துவிட்டது. இதற்காக இந்திய அரசுக்கும் கூகில் நிறுவனத்திற்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments