காவிரி நதிநீர்ப் பிரச்னையில் இயக்குநர் பாரதிராஜா தனது கருத்தையும் மத்திய, மாநில அரசுகளுக்கான கேள்விகளையும் முன்வைத்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பது அப்படியே.
என் இனிய தமிழ் மக்களே!
உலகளாவிய தமிழ் மக்கள் அனைவருடனும் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய சூழலில் இருக்கிறேன். அண்டை மாநிலமான கர்நாடகாவில் சமீபகாலமாக, இந்த காவிரி நதிநீர்ப் பிரச்னைகளில் ஏற்பட்டுவரும் விளைவுகளை நீங்கள் தொலைக்காட்சிகள் வழியாகப் பார்த்திருப்பீர்கள். இதுமட்டுமல்ல; கேரளா, ஆந்திரா, இப்படி அண்டை மாநிலங்களெல்லாம் நம்மை அங்கே இங்கே சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இதை உலகத் தமிழர்களுக்கு நான் பகிர்ந்துகொள்வது, பதிவுசெய்வது என் கடமையாகக் கருதி ஒரு அறிக்கையைக் கொடுக்கிறேன்.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழர்கள்மீதும் தமிழர்களின் உடைமைகள்மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியும், வாகனங்களுக்குத் தீ வைத்தும் கர்நாடக அரசுடன் அரசியல் கட்சிகளும், கைகோர்த்துக்கொண்டு எங்கள் மக்கள்மீது இனவெறியுடன் தாக்குதல் நடத்துகிற கர்நாடக அமைப்புகளின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒருவார காலமாக தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியநிலையிலும், நேற்று பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் செயல்பாடு கொஞ்சம் வேதனைக்குரியது. மேலும் தாக்குதல் நடத்தாவண்ணமும், காவிரி நதிநீர்ப் பிரச்னையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
தமிழகம் இன்றுவரை, வந்தாரை வாழவைக்கும் தமிழகமாகத்தான் இருக்கிறது. துண்டு துண்டாகக் கிடந்த தேசத்தை இணைத்தது ஒரு தலைவன். இணைந்த தேசத்தை சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவன் ஒரு தலைவன். வாங்கிய சுதந்திரத்தை வளமாக்குகிறோம் என வரிந்துகட்டி நிற்கும் இந்த நாட்டின் பலநூறு தலைவர்களே! தயவுசெய்து இந்தப் பிரச்னையில் ஒரு நல்ல தீர்வு காணுங்கள். கட்சி பேதமற்று, அரசியல் நோக்கமற்று இதில் தீர்வு காண வேண்டும். இது உங்கள் கையில் இருக்கிறது.
தமிழன் தமிழ்நாட்டிலேயே மைனாரிட்டியாக இருக்கிறானோ என்ற சந்தேகம் எழுகிறது. கர்நாடகாவில் வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டியது மத்திய-மாநில அரசுகளின் தலையாய கடமையாகும் என்பதை உணர வேண்டும். சட்டம்-ஒழுங்கு சீரழிந்திருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 144 தடை உத்தரவுக்குப் பிறகும் இத்தகைய பெரிய கலவரங்களும் பஸ் எரிப்பும் இன துவேஷத்தைத்தான் வளர்க்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை எங்கள் உணர்வுகளை அடக்கிக்கொண்டு பவ்யமாக கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் படையில் நின்று போரிடுவதற்காக, பர்மாவாழ் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் பல லட்சம்பேர் திரண்டு போரிட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களால் மறுக்க முடியாது.
இந்த தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தியடிகள் அவர்களை நோக்கி ஆப்பிரிக்காவில் சுட்டபோது, அவர் உயிரைக் கொல்லவந்த குண்டை நெஞ்சினில் தாங்கி உயிர்விட்டவன் தமிழன். அடுத்தபிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாகப் பிறக்க வேண்டும் என ஆத்மார்த்தமாகப் பேசியவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், காந்தியடிகளும் என்பது எங்களை சிதைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாதது அல்ல. கார்கில் யுத்தத்தில் அதிகம் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தமிழர்கள். பீகார் வெள்ளமாக இருந்தாலும், குஜராத் பூகம்பமாக இருந்தாலும் இந்த தேசத்தில் முதன்முதலில் அள்ளிக்கொடுத்து தேசிய பாசத்தை வெளிக்காட்டியது எங்களது தமிழர்களே. சமீபத்தில், நடந்த இன அழிப்பில் ஒன்றரை லட்சம்பேரை இழந்து சொல்லமுடியாதளவுக்கு துயரத்தில் இருந்த சூழலில், மரம் வெட்ட வந்தவர்களைத் தண்டிக்கிறோம் என்றபெயரில், ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள். முல்லைப் பெரியாறு பரம்பிக்குளம் அணை பிரச்னையில் எங்கள் தமிழர்களைத் தாக்குவதும் தற்போது, காவிரி நதிநீர்ப் பிரச்னையில் எங்களது தமிழர்களின் கோடிக்கணக்கான உடைமைகளைச் சிதைத்தும், தமிழர்களை அடிப்பதும் என்பது நாங்கள் இந்த தேசத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
இந்திய அரசு, இதுவரை இந்தப் பிரச்னையில் தலையிடாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, 500 ஆண்டுகளுக்குமுன்பு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இனங்களும் தனித்தனியாக தங்களைத் தாங்களே ஆண்டதுபோல், நாங்களே ஏன் எங்களை ஆண்டுக்கொள்ளக் கூடாது என்ற கேள்வியை எங்களது இளைஞர் மனதில் நீங்களே விதைத்துவிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நிலைமை மோசமடைவதற்கு முன்னால் மத்திய, மாநில அரசுகளும் தங்களது கடமையை சரிவரச் செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

No comments:
Write comments