வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் அனைத்து சம்பவங்களும் பிரதமர் மோடிக்கு தெரியும்.கர்நாடகாவில் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும் மத்திய அரசு வழிவகை காண வேண்டும். காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இதற்காக தி.மு.க. எம்.பி.க்கள் குழு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை பார்க்கும் போது சிறைக்குள்ளேயே கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இந்த தாக்குதலை சிறை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை. கைதியை பாதுகாக்காமல் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
ஜெயிலுக்குள் தாக்குதல் ஏன் நடந்தது என்பதை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments