முதல்வர் ஜெயலலிதா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்புடன் அனைவரும் காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் இரவு ஏழு மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த மீடியாவை உள்ளே வரச் சொல்லி அழைப்பு வந்தது. ஆனால், ‘நிருபர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம். கேமராமேன்கள் மட்டுமே அனுமதி’ என்று சொல்லி அனுமதித்தனர். கேமராமேன்கள் உள்ளே போனதும், அங்கே தயாராக காத்திருந்த மருத்துவமனை மருத்துவர் குழுவினர், டைப்பிங் செய்து வைத்திருந்த விளக்கத்தை வாசிக்க ஆரம்பித்தனர். அதற்கு முன்பு, ‘நாங்கள் சொல்வதை மட்டும் பதிவு செய்துக்கோங்க... எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. நாங்களும் பேச மாட்டோம்’ என்ற எச்சரிக்கை அறிவிப்பை சொல்லிவிட்டுத்தான் அதை வாசித்தனர். அந்த அறிக்கையில் இருந்தது இதுதான்...
“முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் தொடர் சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது, அவர் பூரணநலத்துடன் உள்ளார். வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ நிபுணர்கள் குழுவினர் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வரைச் சந்திக்க நாள்தோறும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்வதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல் முற்றிலும் தவறானது. வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார்” என்பதை அறிக்கையாகவும் கொடுத்துவிட்டு அதையே படித்தும் காட்டிவிட்டுப் போனார்கள். நிருபர்கள் வந்தால் கேள்விகள் வரும். கேள்விகள் வந்தால், அது சில சிக்கல்களை உருவாக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடாம். மருத்துவமனையில் இருந்து முதல்வரின் உடல்நிலை தொடர்பாக வெளியாகும் அறிக்கைகள் எல்லாமே சசிகலாவின் அனுமதிக்குப் பிறகே வெளியாகிறதாம்!

No comments:
Write comments