மத்திய அரசு, தனியார்துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தனியார்துறையில் பயிற்சி பெற்றுவரும் 36,000 பேருக்கு, திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்த ’மத்திய தொழில் முனைவோர் அமைச்சகம்’ தனியார் நிறுவன அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு தலா ரூ.18,000 ஊதியமும் வழங்கப்படுகிறது.
தனியார்துறைகளில் 12 முதல் 15 சதவிகிதம் வரை ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின்மூலம் தேவைக்கு அதிகமாக உள்ள ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கி, ஊதியமும் வழங்கப்படுவதால் இந்தத் திட்டம் தனியார்துறைக்கு சாதகமான சூழலையே உருவாக்கும். ஒருபுறம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாலும் மறுபுறம் தனியார்துறையினருக்கு இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதாலும் இத்திட்டம் மத்திய அரசுக்கும் தனியார்துறையினருக்கும் பயன் தரும்.
இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின்மூலம் ஊழியர்களின் திறன் அதிகரித்து, அதன்மூலம் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
பா.ஜ.க. தலைமையில் உருவான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் பொறுப்பேற்று இரண்டாண்டு நிறைவடைந்துள்ளநிலையில், போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.டி., ஆட்டோமொபைல், ஜவுளித்துறை உட்பட எட்டு முக்கியத் துறைகளில் 4.21 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டது. இதையடுத்து, 2015ஆம் ஆண்டு வெறும் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் இதுபோன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்மூலமாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments