இந்தியாவில் 60% மக்கள் விவசாயத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து இருக்கின்றார்கள். விவசாயம் பெரும்பாலும் பருவமழையை சார்ந்திருக்கிறது. இதனால் பருவமழை தவறுவது, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாதது, இடைத்தரகர்களின் சுரண்டல்,கடன் தொல்லை போன்ற காரணங்களால் உழவர்களின் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் பெரும்பாலான விவசாயிகள் கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வீராணம் ஏரி தூர்வாரப்பட்டு அதிலிருந்து வெளியேற்றப்பட்ட மண் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அறந்தாங்கி பகுதியில் உள்ள விளைநிலங்களில் கொட்டப்பட்டது. இதனால், அந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிகழாண்டில் விவசாயக் கடன் தொகையை செலுத்த முடியாது என்று விவசாயிகள் கூறி வந்தனர். கடன் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கிகள் விவசாயிகளின் டிராக்டர்களை அடாவடியாக பறிமுதல் செய்யும். இந்நிலையில், கடன் நிலுவை தொகையை திருப்பி செலுத்தாததால் இரண்டு விவசாயிகளின் டிராக்டர்களை சம்பந்தப்பட்ட வங்கி பறிமுதல் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் தூக்குக் கயிறுடன் ஊர்வலமாகச் சென்று சம்பந்தப்பட்ட வங்கியை கண்டித்து, வங்கியின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுக்கும் வங்கி ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து விவசாயி முத்துராமலிங்கத்தின் டிராக்டரையும் பறிமுதல் செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான முத்துராமலிங்கம் வங்கியின் முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மற்ற விவசாயிகள் உடனடியாக அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம், கோட்டாக் மகிந்திரா வங்கியில் டிராக்டர் கடன் வாங்கியிருந்த தஞ்சை விவசாயி பாலன் மீது, ஒரத்தநாடு காவல்துறை தாக்குதல் நடத்தி, டிராக்டரை பறிமுதல் செய்தனர். இந்த காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தால், அவமானம் தாங்காமல் விவசாயி பாலன் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments