புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் தயங்குவதாகக் கூறப்படுகிறது. புதுவையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், தேர்தல் முடிந்த கையோடு சுயேட்சை எம்.எல்.ஏ-வின் ஆதரவுடன் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி அமைந்தது. இது அதிமுக தலைமைக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ரங்கசாமியைக் கடுமையாக தாக்கி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அந்தக் கூட்டணியும் முறிந்து போனது.
கடும் சிக்கல்
அதன்பின் 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், அதிமுக-வும் தனித்தனியாக போட்டியிட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி-க்கான தேர்தலில் அப்போதைய முதலமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்த வேட்பாளருக்கு எதிராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரங்கசாமிக்குச் சிக்கல் ஏற்பட்டது. சொந்த கட்சி எம்.எல்.ஏ-க்களின் எதிர்ப்பினால் ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 5 எம்.எல்.ஏ-க்களே கொண்ட அதிமுக-வுக்கு எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்கும் சூழ்நிலைக்கு என்.ஆர்.காங்கிரஸ் தள்ளப்பட்டது. இதன் மூலம் 2016 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேரம் ஒதுக்கவில்லை
ஆனால், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா இதற்கு சம்மதிக்கவில்லை. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. புதுச்சேரிக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்தத் தேர்தலில் அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. 8 இடங்களில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பறி கொடுத்தது. அதன்பின் அதிமுக-வுடன் இணக்கமான உறவினை ஏற்படுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கடிதம் கொடுத்தார். ஆனால், ரங்கசாமியைச் சந்திக்க ஜெயலலிதா நேரம் ஒதுக்கவில்லை.
தயக்கம்
இந்நிலையில் நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த தேர்தலின்போது தனித்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வெறும் 598 வாக்குகள் மட்டுமே பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் 18,506 வாக்குகளும், அதிமுக 6,365 வாக்குகளும் பெற்று இருந்தன. பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகளே பெற்று இருந்த நிலையில், தற்போது இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
தனித்துப் போட்டி?
இத்தகைய சூழ்நிலையில் நேற்று பிற்பகலில் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

No comments:
Write comments