முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து நடிகர் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை விசாரித்தார்.
உடல் நல பாதிப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்டு பீல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இருதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக சிறப்பு நிபுணர்கள் 3-ஆவது முறையாக அக்டோபர் 13-ஆம் தேதி சென்னைக்கு வந்தனர்.
25 நாளாக சிகிச்சை: 25-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல்நிலையைச் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அவரின் உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளில், உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது தெரிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நோய் எதிர்ப்புச் சக்திக்கான மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள், உடல் இயக்கமற்ற இயன்முறை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரில் இருந்து இயன்முறை மருத்துவர்கள் வருகை: இந்த நிலையில், முதல்வருக்கு இயன்முறை சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த 2 நிபுணர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு அக்டோபர் 15-ஆம் தேதி வந்துள்ளனர்.
இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஆய்வு செய்து, அவருக்கு அடுத்தகட்ட சிகிச்சையை அளித்து வருகின்றனர். இவர்கள் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து முதல்வருக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஜினிகாந்த் வருகை: இந்த நிலையில், முதல்வரின் உடல்நலம் குறித்து, விசாரிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தனர். சுமார் 30 நிமிடங்கள் இருந்து நிபுணர் குழுவினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரித்துவிட்டு, மாலை 6.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதேபோல், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன், இயக்குநர் கௌதம் உள்ளிட்டோரும் விசாரித்தனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments