ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு விவரம்:
சூதாட்டப் புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இந்த 2 அணிகளுக்கும் ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது அநீதியாகும். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போது தலைமறைவாக உள்ள லலித்மோடி உள்ளிட்ட சிலரின் சதி காரணமாக இந்த 2 அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிகார் கிரிக்கெட் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்தச் சங்கம் நேர்மையான காரணத்துக்காக வழக்கு தொடரவில்லை. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு விதித்த 2 ஆண்டுகள் இடைக்காலத் தடையை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டது.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தாக்கல் செய்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்கள் உகந்தது அல்ல என்று தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். லோதாவின் பரிந்துரைகளை 99% ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கு குறித்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments