ஈராக்கில், ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மோசூல் நகரை மீட்பதற்காக தொடர்ந்து உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. தொடர்ந்து ஈராக் படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் பல தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும், ஒவ்வொருவரும் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் வேகமாக அரசு படையினரை நோக்கி வருவதாகவும் நகரின் தெற்கே ஈராக் படையினருடன் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டு ஈராக் அரசு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் பொது மக்களை ஐ.எஸ். அமைப்பினர் தங்கள் பாதுகாப்பு கேடயமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மோதலுக்கு இடையே 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மோசூல் நகருக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மோதல் நகரின் மையப்பகுதியை அடையும்போது பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
46 வீரர்கள் பலி
இந்நிலையில், ஈராக்கின் கிர்குக் நகரில் சனிக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஈராக் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். இந்தத் தாக்குதல் குறித்து ஈராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “ஈராக்கின் கிர்குக் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 46 பேர் பலியாகினர். 133 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் ஈராக் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். இதற்கு பதிலடியாக ஈராக் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments