மணிப்பூரில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பதினாறு ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா, வருகிற பத்தாம் தேதியன்று புதிய கட்சி ஒன்றை தொடங்குகிறார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமலில் உள்ள சிறப்பு ஆயுதப்படை சட்டத்தினால் பொதுமக்களின் சுதந்திரம் அடியோடு பறிக்கப்படுவதாகக் கூறி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்த சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா கடந்த 2000ஆம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். சுமார் பதினாறு ஆண்டு காலமாக உண்ணாவிரதம் இருந்த அவரை, தற்கொலைக்கு முயல்வதாக கூறி, பலமுறை கைது செய்தனர். காவலிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால், மூக்கின் வழியாகவே அவருக்குத் திரவ உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்ற ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதத்தை அவர் முடித்தார். மணிப்பூரில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். உண்ணாவிரதம் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாக ஷர்மிளா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, இம்பால் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இருந்து ஷர்மிளாவை நேற்று முன்தினம் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். வருகிற 10ஆம் தேதியன்று புதிய கட்சியை தொடங்குகிறார். மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் தோபல் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. இது தற்போதைய முதல்வர் ஒகராம் இபோபி சிங்கின் சொந்த தொகுதியாகும். தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வரும் இரோம் ஷர்மிளா, கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து பேசினார். தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஷர்மிளாவுக்கு கெஜ்ரிவால் சில அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

No comments:
Write comments