காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள் கூட்டியக்கத்தின் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தி.மு.கவினர் மு.கஸ்டாலின் தலைமியில் பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே நியூ ஹால் பகுதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்று ரெயில் நிலையத்தை அடைந்தனர். அங்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடையை மீறி பெரம்பூர் ரெயில் நிலையத்திற்குள நுழைந்த மு.க. ஸ்டாலின் செண்டரலில் இருந்து ஆவடி சென்ற ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறபட்டு சென்றது. ரெயில் மறியலை தொடர்ந்து மு.கஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யபட்டனர்.
இதுபோல் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, திருமாவளவன் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரயிலை மறிக்க சென்றனர். அவர்கள் அனைவரையும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வைகோ மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர், "நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வந்திருக்கிறோம். எனவே, நீங்கள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதித்துதான் ஆக வேண்டும்" என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் மற்றும் 50 தொண்டர்களை மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் போலீசார் அனுமதித்தனர். பின்னர், உள்ளே சென்ற தலைவர்களும் தொண்டர்களும் மங்களூர் செல்வதற்கு தயாராக இருந்த ரெயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் மறியலில் ஈடுபட்ட தொண்டர்களையும் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது குறுக்கிட்ட வைகோ அவர்களுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நாங்கள் அமைதியாக போராடிவிட்டு சென்று விடுவோம். தமிழகத்தில் ரெயில் மறியல் செய்து வரும் விவசாயிகள் யாரையும் வலுக்கட்டாயமாக எழுப்பி வெளியே அனுப்பவில்லை. அதுபோல எங்களையும் அனுப்ப வேண்டாம். நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதியுங்கள்" என்று பேசியதை அடுத்து போலீசார் அமைதியானர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments